“அடுத்த தேர்தலில் போட்டியிட ராகுல் காந்தி சமுத்திரத்தில் தான் சீட் தேட வேண்டும். நாட்டில் அவருக்கு சீட் இல்லை” என்று மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கிண்டல் தொணியில் பேசியுள்ளார். மக்களவை முதல்கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிந்தது. இதனையொட்டி செய்தியாளர்களை சந்தித்த மோகன் யாதவ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மோகன் யாதவ் பேசுகையில், “வயநாடு எம்.பி. ராகுல் காந்தியால் கடந்த முறை வடக்கே இருந்த அமேதி தொகுதியை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. அங்கே அவர் நம் மதத்தை இழிவுபடுத்தினார். இளைஞர் சக்தியை, பெண்களை இழிவுபடுத்தினார். தோல்வியுற்றார். உத்தரப் பிரதேசத்தின் அமேதியில் தோல்வியுற்ற பின்னர் தெற்கே ஓடி கேரளாவுக்குச் சென்றுவிட்டார். இனி வரும் தேர்தல்களில் அவருக்கு நாட்டில் சீட் ஏதும் கிடைக்காது. அதனால் சமுத்திரத்தில் தான் அவர் சீட் தேட வேண்டியிருக்கும்.
பிரதமர் நரேந்திர மோடி அரசு நக்சல் தொல்லை, தீவிரவாதம், ஊழல், வறுமையை எதிர்த்து வெற்றிகரமாக செயல்படுகிறது. அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பிரதமர் மோடி பங்கேற்றது சனாதனத்தின் உச்ச சிகரம். அதேபோல் அபுதாபியில் இந்துக் கோயில் நிறுவப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பாஜக 29 தொகுதிகளைக் கைப்பற்றும்” என்றார்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலை எடுத்துக்கொண்டால், இந்தத் தேர்தலில் மொத்தமுள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 28 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் மத்தியப் பிரதேசத்தில் ஒரேயொரு தொகுதியில்தான் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து 2003 வரை காங்கிரஸ் கட்சிதான் இந்த மாநிலத்தை அதிக காலம் ஆண்டு வந்துள்ளது. 2003 தேர்தலுக்குப் பிறகு பாஜகதான் இந்த மாநிலத்தை ஆட்சி செய்து வருகிறது. இடையில், 2018 முதல் 2020 வரை சுமார் 15 மாதங்கள் காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் முதல்வராக இருந்தார்.