ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்கிறார் : அண்ணாமலை மீது தேர்தல் அதிகாரியிடம் திமுக பரபரப்பு புகார்

கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு ஜிபே மூலம் அண்ணாமலை பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார் அளித்துள்ளது.

கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும் என்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவந்தார் அண்ணாமலை. அவர் இரவு 10 மணிக்குப் பிறகும் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரச்சாரம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இரவு 10 மணிக்கு மேல் காரில் இருந்தபடியே பிரச்சாரம் செய்ததை கண்டித்த போலீஸாருடன் அண்ணாமலை வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுபோன்ற தொடர் தேர்தல் விதிமீறலில் அண்ணாமலை ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், தற்போது கோவை தொகுதி வாக்காளர்களுக்கு ஜிபே மூலமாக பணம் பட்டுவாடா செய்வதாக அண்ணாமலை மீது திமுக புகார் எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக கோவை வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளரான பத்ரி என்ற பழனிசாமி கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில், “கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை, தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாக்காளர்களை செல்போனில் அழைத்து வாக்குச் சேகரித்து வருகிறார். தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டு ஜிபே மூலம் அண்ணாமலையே வாக்காளர்களுக்கு பணம் அனுப்பி வருகிறார். மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைப்படி பிரச்சாரம் முடிந்தவுடன், வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற விதியை பாஜக பின்பற்றவில்லை.

தேர்தல் நடத்தை விதிகளை மீறி சென்னையைச் சேர்ந்த ஜெய்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரைச் சேர்ந்த அண்ணாமலையின் மைத்துனர் சிவக்குமார் ஆகியோர் கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் தங்கியுள்ளனர். மேலும், பொதுமக்களுக்கு செல்போனில் அழைத்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கேட்டு ஜிபே மூலமாக பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர். இதுகுறித்து தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.