ரோடு ஷோ நடத்தும் மோடியை மக்கள் ரோட்டில் தான் நிறுத்துவார்கள் : உதயநிதி ஸ்டாலின் காட்டம்

”ரோடு ஷோ நடத்தும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வாக்களித்து, மக்கள் அவரை தெருவில் தான் நிறுத்துவார்கள்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுகவின் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “38 தொகுதிகளை முடித்துவிட்டு, கடைசியாக 39-வது தொகுதியாக கோவைக்கு வந்துள்ளேன். கணபதி ராஜ்குமாருக்கு நீங்கள் போடும் ஓட்டு, மோடிக்கு வைக்கும் வேட்டு. கோவை தொகுதியில் பத்து ஆண்டுகள் கழித்து உதயசூரியன் சின்னம் போட்டியிடுகிறது. தலைவரிடம் கேட்டு இந்த தொகுதியில் போட்டியிடுகிறோம். குறைந்தது 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “மக்கள் வாக்களித்து ஆதரவைப் பெற்று முதலமைச்சராக உட்கார்ந்தவர் ஸ்டாலின். யார் காலிலாவது போய் விழுந்தாரா? எங்காவது தவழ்ந்து போனாரா? அப்படி யார் முதலமைச்சரானார்? தவழ்ந்து தவழ்ந்து சசிகலா காலை பிடித்து முதலமைச்சராகி, அவர் காலையே வாரி விட்டவர் தான் எடப்பாடி பழனிசாமி. அவர் சசிகலாவுக்கு மட்டும் துரோகம் செய்யவில்லை, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர்.

பாஜகவுடன் சேர்ந்தால் 10 ஓட்டுகள் கூட விழாது என்பதால் இப்போது தேர்தல் நாடகம் ஆடுகிறார்கள். ஏமாந்துவிடாதீர்கள். 40 க்கு 40 இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். முதலமைச்சர் கை காட்டுபவர் பிரதமராக வேண்டும்.

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும் என ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். ராகுல் காந்தி நம் தலைவருக்கு ஸ்வீட் வாங்கி கொடுத்து எல்லோரையும் காலி செய்துவிட்டார். 29 பைசா தரும் போதே, இவ்வளவு செய்யும் முதலமைச்சர், நம்மை மதிக்கும் பிரதமர் அமைந்தால் இன்னும் எவ்வளவு செய்வார்?

இந்தத் தேர்தல் மானமிகு சுயமரியாதைக்காரர்களுக்கும், இரக்கமற்ற சர்வதிகாரி 29 பைசாவுக்கும் நடக்கும் போர். திமுகவுக்கு தூக்கம் போய்விட்டதாக சொல்கிறார்கள். ரோடு ஷோ நடத்தும் மோடிக்கு எதிராக வாக்களித்து மக்கள் அவரை தெருவில் நிறுத்துவார்கள்” என்றார்.