“மதுரையின் மருமகளாக அதிமுகவுக்கு வாக்குகள் கேட்கிறேன். வாய்ப்பளியுங்கள்” என மருத்துவர் சரவணனுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பிரச்சாரம் செய்தார்.
மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணனை ஆதரித்து, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை பெத்தானியாபுரம், ஒத்தக்கடை, மேலூர் முதலான இடங்களில் பிரச்சாரம் செய்தார். பெத்தானியாபுரம் பகுதியில் அவர் பேசியது: “எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் நல்லாசியோடு எங்களது கூட்டணி வெற்றி பெறும். மக்கள் விரும்பும், வெற்றிக் கூட்டணியாக அதிமுக – தேமுதிக உள்ளது. மதுரை என்றாலே கருப்பு புரட்சித் தலைவர் விஜயகாந்த் தான். அவர் இன்றி மதுரைக்கு வந்தது சோகம் மட்டுமின்றி மன அழுத்தமும் ஏற்பட்டுள்ளது. கணவர் இன்றி ஒரு பெண் இருக்கும்போது, அவரின் மனநிலை என்னவாக இருக்கும் என்பதை தாய்மார்கள் அறிவர்.
உங்கள் வீட்டு பெண்ணாக, மதுரையின் மருமகளாக அதிமுகவுக்காக வாக்குகள் கேட்கிறேன். வாய்ப்பு அளியுங்கள். தேர்தல் பத்திரத் திட்டத்தால் லாட்டரி நிறுவனத்திடம் ரூ.509 கோடி வாங்கிய திமுகவை பற்றி சு.வெங்கடேசன் ஏன் பேசவில்லை, கேள்வி கேட்கவில்லை. உண்மையான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்காரர் எனக் கூறும் அவர் திமுகவின் ஊழல், தேர்தல் பத்திர நிதி குறித்து கேள்வி கேட்க தைரியம், திராணி உள்ளதா?
திமுகவில் உதயநிதி முதல் கதிர் ஆனந்த் வரை எல்லோரும் பெண் வாக்காளர்களை இழிவாக பேசுகின்றனர். கடைசி நேரத்தில் சிந்தித்து வாக்களியுங்கள். விஜயகாந்த் பிறந்த தெய்வீக மண்ணில் பிறந்த ஆண் குழந்தைக்கு எம்ஜிஆர் மற்றும் விஜயகாந்த் பெயரை குறிக்கும் விதமாக விஜய ராமச்சந்திரன் என பெயர் சூட்டுகிறேன்” என்றார்.
மதுரை ஒத்தக்கடை பகுதியில் அவர் பேசும் போது, “மத்திய அரசின் ஊழலை கண்டிக்காத சு.வெங்கடேசனுக்கு ஓய்வு கொடுங்கள். சரவணனுக்கு வாய்ப்பு கொடுங்கள். எம்பி நிதியாக கிடைத்த ரூ.17 கோடியில் ரூ.4.24 கோடியை மட்டுமே செலவு செய்துவிட்டு ரூ.22 கோடியை செலவிட்டதாக பொய் மூட்டை அவிழ்த்துவிடும் சு.வெங்கடேசனுக்கு பாடம் புகட்டுங்கள். எங்களது நால்வர் கூட்டணியை வெற்றி பெற செய்யுங்கள். பைனாக்குலர் மூலம் தொகுதி முழுவதும் தேடியும் கிடைக்காத சு.வெங்கடேசனை இந்த முறை தவிர்த்து, சரவணனுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டுகிறேன்” என்றார்.
முன்னதாக, பெத்தானிபுரம் பகுதிக்கு பிரேமலதா பிரச்சாரத்திற்கு வந்த போது, ‘மருமகளே, மருமகளே வா, வா உனது வலது காலை எடுத்து வைத்து வா, வா’ என்ற பாடலை பாடி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வரவேற்றார். தொடர்ந்து அவர் பேசும்போது, “இந்தியா கூட்டணிக்கும், திமுகவுக்கும் நிலையான கொள்கை உண்டா? மாநிலத்துக்கு, மாநிலம் கொள்கை மாறுபடுகிறது. பாஜக கட்சி அல்ல. மதவாத இயக்கம்.
அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த கீழடி அருங்காட்சியகத்திற்கு சு.வெங்கடேசன் போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார். அவருக்கு மானம், ரோசம், வெட்கம் இல்லையா? சித்திரைத் திருவிழாவுக்கு வரும் மக்களுக்கு விசிறி கொடுப்பது போன்று பாஜக தேர்தலுக்கு, தேர்தல் மக்களை சந்திக்கும். உக்ரைன் போர் போன்ற வெளிநாட்டு பிரச்சினைகளில் தலையீடும் பிரதமர் மோடி, கச்சத்தீவு பிரச்சனையில் ஏன் தலையிட வில்லை? 17 ஆண்டுக்கு பிறகு தேர்தலுக்கென பேசுகிறார்,” என்றார்.