இந்தியா கூட்டணிக்கு தொலைநோக்குப் பார்வையும் இல்லை; நம்பிக்கையும் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிஹாரின் கயா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, “பாஜவின் உறுதிமொழிப் பத்திரம் (தேர்தல் அறிக்கை) இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. சில கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை ‘கேரண்டி கார்டு’ என அழைப்பது இதுவே முதல் முறை.
நமது அரசியலமைப்புச் சட்டம் தூய்மையானது. அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் வளமான இந்தியாவை உருவாக்க கனவு கண்டனர். ஆனால், நாட்டில் பல தசாப்தங்களாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, வளமான இந்தியாவை உருவாக்குவதற்கான வாய்ப்பை தவறவிட்டது.
பாஜக தலைமையிலான அரசு எந்த ஒரு வாய்ப்பையும் தவறவிடவில்லை. அதன் காரணமாகத்தான், நாட்டில் 25 கோடி ஏழைகள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். மோடியின் உத்தரவாத அட்டை (கேரண்டி கார்டு) அடுத்த 5 ஆண்டுகளுக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு மூன்று கோடி வீடுகள் கட்டித் தரப்படும். ஏழைகளுக்கு அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இலவச ரேஷன் வழங்கப்படும். 70 வயது நிரம்பியவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படும், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 வழங்கும் பிரதமர்-கிசான் சம்மன் நிதி தொடரும். இவை அனைத்தும் மோடியின் கேரண்டிகள்.
பாஜக தேர்தல் அறிக்கையில், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும், ஒவ்வொரு துறைக்கும் ஒரு திட்ட வரைபடம் உள்ளது. இளைஞர்கள் வேலை தேடி வெளியே செல்ல வேண்டியதில்லை. கடந்த 10 ஆண்டுகளில் ஒரு புரட்சி ஏற்பட்டுள்ளது. நாட்டில் 10 கோடி பெண்கள் சுயஉதவி குழுக்களுடன் இணைந்துள்ளனர். பிஹாரில் 1.15 கோடி பெண்களும், கயாவைச் சேர்ந்த 5.15 லட்சம் பெண்களும் சுயஉதவி குழுக்களுடன் இணைந்துள்ளனர். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு இருந்தபோது, பிஹார் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.150 கோடிக்கும் குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 10 ஆண்டுகளில் இந்தக் குழுக்களுக்கு ரூ.40,000 கோடிக்கு மேல் நிதி வழங்கியுள்ளது. வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் எங்கள் நிகழ்ச்சி நிரலில் உள்ளன.
இந்தியா அணிக்கு தொலைநோக்குப் பார்வையோ, நம்பிக்கையோ இல்லை. அவர்களிடம் எந்த சாதனையும் இல்லை. பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் செய்த பணிகளைச் சொல்லித்தான் அவர்கள் வாக்கு கேட்கிறார்கள். நிதிஷ் குமாரும், மத்திய அரசும் செய்த மக்கள் நலத் திட்டங்களுக்கு இந்தியா அணியினர் ஏன் உரிமை கோருகிறார்கள் என்பது ஒட்டுமொத்த பிஹாருக்கும் தெரியும். பிஹாரில் பல ஆண்டுகளாக ஆர்.ஜே.டி ஆட்சி செய்துள்ளது. ஆனால் அவர்களின் அரசு செய்த பணிகளை விவாதிக்க அவர்களுக்கு தைரியம் இல்லை. பிஹாரில் காட்டாட்சியின் மிகப்பெரிய முகமாக ஆர்.ஜே.டி உள்ளது” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.