“10 வருடங்களாக இந்தியாவை ஆண்ட பிரதமர் தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை” – உதயநிதி

“கடந்த 2021-ல் அடிமைகளை விரட்டியது போல வரும் 19 ஆம் தேதி அவர்களது எஜமானர்களை விரட்ட வேண்டும். இந்தத் தேர்தலில் ஆ.ராசாவை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் . 10 வருடங்களாக இந்தியாவை ஆண்ட பிரதமர் தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை” என்று உதகையில் உதயநிதி பேசியுள்ளார்.

மக்களவைத் தேர்தலை ஒட்டி நீலகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதகை ஏடிபி பகுதியில் இன்று மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “நம்முடைய மாநில உரிமைகளை மீட்க வேண்டும் என்றால் 40-க்கு 40 தொகுதிகள் ஜெயிக்க வேண்டும். அதற்காகவே நான் கலைஞரின் பேரன் உதயநிதி ஸ்டாலின் உங்களிடம் ஓட்டு கேட்க இங்கு வந்துள்ளேன்.

கொரோனா தொற்று, மழை வெள்ளம் பதிப்பு காலகட்டத்தில் தமிழக முதல்வர் ரூ. 6 ஆயிரம் கொடுத்தார், ஆனால் தமிழகத்துக்கு மோடி ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் பிங்க் பேருந்து ஓடுகின்றன. பேருந்துகளை யாரும் பிங்க் பேருந்து என்று கூறவில்லை ஸ்டாலின் பேருந்து என்றுதான் கூறுகிறார்கள். பெண் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்கத் தொகை ரூ.1000 வழங்கப்படுகிறது, மகளிருக்கு மாதம் ரூ.ஆயிரம் திட்டத்தில் தற்போது வரை ஒரு கோடியே 18 லட்சம் மகளிர் பயன் பெறுகிறார்கள். தேர்தல் முடிந்து 5 முதல் 6 மாதங்களில் அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

10 வருடங்களாக இந்தியாவை ஆண்டுள்ள பிரதமர் தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. நீட் தேர்வு மூலம் 22 குழந்தைகள் உயிரிழந்திருக்கின்றார்கள். எனவே சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிக்கு நான் பொறுப்பேற்று கொள்கிறேன். மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியது போல கண்டிப்பாக தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யபடும். பாஜக ஆளும் 6 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை தற்பொழுது கட்டப்பட்டுள்ளது ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட இதுவரை ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை.

தமிழகத்திலிருந்து ஒரு ரூபாய் ஜிஎஸ்டி வரி அனைவரும் கட்டிக் கொண்டிருக்கிறோம் அதில் பிரித்துக் கொடுப்பதுதான் மத்திய அரசுடைய வேலை. ஆனால் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்துக்கு வெறும் 29 பைசா தான் தருகிறார்கள். கடந்த 2021-ல் அடிமைகளை விரட்டியது போல வரும் 19 ஆம் தேதி அவர்களது எஜமானர்களை விரட்ட வேண்டும். இந்த தேர்தலில் ஆ.ராசாவை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார்.