பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி பணம், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுடையது : முதல் தகவல் அறிக்கையில் வெளியீடு

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி பணம், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுடையது என முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சென்னையில் இருந்து நெல்லைக்கு கடந்த 6ம் தேதி இரவு புறப்பட்டு சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தேர்தல் செலவிற்கு பணம் கொண்டு செல்லப்படுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலை தேர்தல் பறக்கும்படை அதிகாரி செந்தில் பாலமணி தலைமையில் பறக்கும் படையினர், தாம்பரம் ரயில்வே போலீசார் மற்றும் தாம்பரம் போலீசார் உதவியுடன் அதிரடி சோதனை செய்தனர்.

ரயிலில் எஸ்7 கோச் பெட்டியில் 6 பைகளில் மூன்று பேரிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், கொளத்தூர், திருவிக நகர் பகுதியை சேர்ந்த சதீஷ் (33), அவரது தம்பி நவீன் (31), ஸ்ரீவைகுண்டம் பெருமாள் (25) என்பதும், நெல்லை பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கம் பகுதியில் உள்ள ப்ளூ டைமண்ட் ஓட்டலிலும், நயினார் நாகேந்திரனின் உறவினர் சேப்பாக்கம் பகுதியில் நடத்தி வரும் ஓட்டல் ஒன்றிலும் இருந்து நெல்லைக்கு தேர்தல் செலவுக்கு பணத்தை கொண்டு சென்றதும் தெரிய வந்தது. சதீஷ் மற்றும் அவரது தம்பி நவீன் இருவரும் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கம் பகுதியில் உள்ள ப்ளூ டைமண்ட் ஓட்டலில் வேலை செய்ததும், பெருமாள் நயினார் நாகேந்திரனின் உறவினர் என்பதும், சதீஷிடம் பாஜக உறுப்பினர் அட்டை இருந்ததும், 3 பேரும் பணத்தை திருநெல்வேலிக்கு கொண்டு சென்றதும் தெரிந்தது.

இந்த பணம் தாம்பரம் வட்டாட்சியர் நடராஜனிடம் ஒப்படைத்து, அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டது. தொடர்ந்து, பிடிபட்ட 3 பேர் மீதும் தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து 20 நாட்களுக்கு தினமும் காலை 10 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகி மூன்று பேரும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனிடையே அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் எடுத்துச் சென்றதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் பதிவாகி உள்ளது.

அதில், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் அடையாள அட்டை, பாஜக உறுப்பினர் அட்டை பறிமுதல் செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் எனவும், வாக்காளர்களுக்கு கொடுக்கத்தான் பணத்தை எடுத்து சென்றதாக கைது செய்யப்பட்ட நபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக அந்த முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.