இந்தியாவின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் 3 புதிய புல்லட் ரயில்கள் இயக்கப்படும் என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வரும் மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார். ‘மோடியின் உத்தரவாதம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கை ‘சங்கல்ப் பத்ரா’ என்று அழைக்கப்படுகிறது. தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இந்தியாவின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் 3 புல்லட் ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டமான அகமதாபாத் – மும்பை புல்லட் ரயிலின் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. அத்திட்டம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. இந்த திட்டத்தை போல் வட இந்தியாவில் ஒரு புல்லட் ரயிலும், தென்னிந்தியாவில் ஒரு புல்லட் ரயிலும், கிழக்கு இந்தியாவில் ஒரு புல்லட் ரயிலும் இயக்கப்படும். இதற்கான கணக்கெடுப்பு பணிகளும் விரைவில் தொடங்கும்” என்று அறிவித்தார்.
508 கிமீ நீளமுள்ள அகமதாபாத் – மும்பை இடையே நாட்டின் முதலாவது புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த தடத்தில் வரும் 2026-ல் புல்லட் ரயிலை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, தேசிய அதிவேக ரயில் கழகம் எனும் நிறுவனம் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது முதல்கட்டமாக குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் பங்களிப்புடன், குஜராத்தின் சபர்மதி – மும்பையின் பாந்த்ரா – குர்லா காம்ப்ளக்ஸ் இடையே 508 கி.மீ. தூரத்துக்கு புல்லட் ரயில் இயக்க தனி வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.
இதற்கிடையே, நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் வந்தே பாரத் ரயில் கொண்டுவரப்படும் என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 2019ல் முதல் வந்தே பாரத் அதிவேக ரயில் சேவைகள் இந்தியாவில் இயக்கப்பட்டு வருகின்றன. மாநிலங்களுக்கு ஒன்று வீதத்தில் தொடங்கப்பட்டு, தற்போது மொத்தம் 51 ரயில்கள் இயக்கத்தில் உள்ளன. இதனிடையேதான், “வந்தே பாரத் ஸ்லீப்பர், வந்தே பாரத் சேர் கார் மற்றும் வந்தே பாரத் மெட்ரோ என மூன்று வடிவங்களில் நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் வந்தே பாரத் ரயில் கொண்டுவரப்படும்” என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.