டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 134-வது பிறந்த நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இன்று அவரது திருவுருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நாடாளுமன்றத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “நமது அரசியலமைப்பின் சிற்பியும், நமது தேசத்தைக் கட்டமைத்த மகத்தான தலைவர்களுள் ஒருவருமான பாபாசாகேப் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் பிறந்த நாளில் நமது நாட்டுமக்களுக்கு நான் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறும்போது, “டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளில் அவருக்கு எனது பணிவான அஞ்சலிகள். பாரதத் தாயின் புதல்வரான அவர் இந்திய அரசியல் அமைப்பின் சிற்பி மட்டும் இல்லை, சமூக நீதிக்காகவும் பாடுபட்டவர். சட்டத்தின் ஆட்சி, சமூக உரிமைகள், பாலின சமத்துவம் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவைகளை மேம்படுத்து அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம், சமத்துவ இந்தியாவைக் கட்டி எழுப்பும் சமூக மாற்றத்துக்கு வித்திட்ட முன்னோடியாவர். டாக்டர் அம்பேத்கரின் லட்சியங்களை ஏற்றுக்கொண்டு சமூக நீதிக்கான அவரது பார்வைகளை நினைவாக்க பாடுபடுவோம்” என்று தெரிவித்தார்.
கடந்த 1891ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி பிறந்த அம்பேத்கர் ஒரு சட்ட நிபுணர், பொருளாதார அறிஞர், அரசியல்வாதி, சமூக சீர்திருத்தவாதியாவார். இவர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான சமூக அநீதிக்கு எதிராக போராடினார். பெண்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான உரிமைகளை ஆதரித்தார்.
அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகம் மற்றும் லண்டன் பல்கலைக்கழகம் இரண்டிலும் அம்பேத்கர் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 1951ம் ஆண்டு மகத் நகரத்தில் இருந்த குளத்தில் தலித் மக்கள் தண்ணீர் எடுப்பதற்கு இருந்த தடைக்கு எதிராக சத்தியாக்கிரக போராட்டம் நடத்தினார்.
கடந்த 1932ம் ஆண்டு செப்.25-ம் தேதி புனா நகரில் அம்பேத்கர் மற்றும் மதன் மோகன் மாளவியா இடையே புனா ஒப்பந்தம் என அறியப்படும் ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்படி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தேர்தலில் முன்பு கிடைத்துவந்த 71 இடங்களுக்குப் பதிலாக 148 இடங்கள் கிடைத்தன.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை எழுத அமைக்கப்பட்ட ஏழுபேர் கொண்ட குழுவில் அம்பேத்கரும் ஒருவர். இந்திய அரசு கடந்த 1990-ம் ஆண்டு அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கியது. பாபாசாகேப் அம்பேத்கர் கடந்த 1956-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது உயிரிழந்தார்.