அரியலூர் அருகே கலியபெருமாள் கோவிலில் பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி

அரியலூர் அருகே, கலியபெருமாள் கோவிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அரியலூர் அருகே, கல்லங்குறிச்சி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கலியபெருமாள் கோயில் எனப்படும், கலியுக வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. ஆஞ்சநேயர் உருவத்துடன் கம்ப பெருமானை மூலவராக கொண்ட இக்கோயிலில், ஆண்டு தோறும் தமிழ் புத்தாண்டு அன்று பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி கோவில் வளாகத்தில் நேற்று காலை பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவிலின் ஆதீன பரம்பரை தர்மகர்த்தாக்கள் கமலா ராமச்சந்திரன், ராமதாஸ், வெங்கடாஜலபதி உள்ளிட்டோர் முன்னிலையில், புரோகிதர் ஆர்.வீரராகவ ஐயங்கார், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, குரோதி வருடத்துக்கான பஞ்சாங்கத்தை படித்து விளக்கி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயில் ஆதீன பரம்பரை தர்மகர்த்தாக்களின் குடும்ப உறுப்பினர்கள், மற்றும் திருக்கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும், சர்க்கரை பொங்கல், புளியோதரை உள்ளிட்ட அன்னதானம் வழங்கப்பட்டது.