2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள ஒரு குடோனில் இருந்த போதை பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் 50 கிலோ வேதிப்பொருட்களை கடந்த பிப்ரவரி மாதம் 15-ம்தேதி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். அத்துடன் அங்கிருந்த சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட முன்னாள் திமுக நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் கடந்த மார்ச் 10ம் தேதி கைது செய்யப் பட்டார். இதையடுத்து ஜாபர் சாதிக்கின் கூட்டாளியான சதா என்ற சதானந்தத்தையும் போலீஸார் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து ஏப்ரல் 9 ம் தேதி, இவ்வழக்கில் சட்டவிரோத பணபறிமாற்றமும் நடைபெற்றிருப்பதாக குற்றம்சாட்டி, அமலாக்கத் துறையினர் ஜாபர் சாதிக், மற்றும் இயக்குநர் அமீருக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை செய்தனர். விசாரணைக்கு வருமாறு புதுச்சேரியைச் சேர்ந்த ஈரம் ராஜேந்திரன் என்பவருக்கு போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலிஸார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்தநிலையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் முதற்கட்ட குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். இதன் மீதான விசாரணை விரைவில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தொடங்க உள்ளது.