தூத்துக்குடியில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் வேலைநிறுத்தம்

சீன லைட்டர்கள், பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் இன்று முதல் வேலை நிறுத்தத்தை அறிவித்து உள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகளில் தயாரிக்கின்ற தீப்பெட்டிகள் வடமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அண்மை காலமாக தடையை மீறி சீன லைட்டர்கள் தரைவழி மார்க்கமாக இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தியாவிலும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் உற்பத்தி செய்யப்பட்டு அரசு விதிகளை மீறி குறைந்த விலையில் விற்பனை செய்வதால் வடமாநிலங்களில் தீப்பெட்டி விற்பனை பாதியாக குறைந்து விட்டது.

இதன் காரணமாக மாவட்டத்தில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் தொடர்ந்து நடத்த முடியாத அளவிற்கு உள்ளது. மேலும் உற்பத்தி செய்யப்பட்ட தீப்பெட்டி பண்டல்கள் கையிருப்பு அதிகமாக இருப்பதால் மூலப்பொருள் வாங்கிய நபர்களுக்கு பணம் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு, தொழில் மிகவும் நலிவுற்று தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே இந்த சூழ்நிலைக்கு தற்காலிக தீர்வு காணும் பொருட்டு இன்று முதல் வருகிற 21-ந் தேதி வரை கோவில்பட்டி, எட்டயபுரம், கழுகுமலை, விளாத்திகுளம், கடலையூர், அப்பனேரி, இளையரசனேந்தல் போன்ற பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகளும் உற்பத்தி நிறுத்தம் செய்வதென்று உற்பத்தியாளர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே இன்று முதல் அனைத்து தீப்பெட்டி தொழிற்சாலைகளும் உற்பத்தி நிறுத்தம் செய்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.