“இந்தியா கூட்டணி தலைவர்களின் ஒற்றை நோக்கம், தங்கள் குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றமே” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் மாண்ட்லா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, “இந்தத் தேர்தலில் ஒரு பக்கம் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக இருக்கிறது. மறுபக்கம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட இந்தியா கூட்டணி இருக்கிறது. இந்தியா கூட்டணி தலைவர்களின் ஒற்றை நோக்கம், தங்கள் குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றம் மட்டுமே.
ஆனால், நாட்டில் உள்ள ஏழைகள், ஆதிவாசி மக்கள், பட்டியல் சமூக மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோரின் முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில் கொண்டு பாடுபட்டு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. காங்கிரஸ் ஒருபோதும் ஆதிவாசி மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபடவில்லை. மாவட்ட கனிம நிதியை வம்ச மேலாண்மை நிதியாக மாற்றியவர்கள் அவர்கள்.
நரேந்திர மோடி நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபடுகிறார். ஆனால், இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் தங்கள் மகன், மகள் ஆகியோரின் முன்னேற்றத்துக்காகவே பாடுபடுகிறார்கள். திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தனது அண்ணன் மகனை முதல்வராக ஆக்க விரும்புகிறார். சரத்பவார் தனது மகள் முதல்வராக ஆக வேண்டும் என விரும்புகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தனது மகனை முதல்வராக்க வேண்டும். சோனியா காந்திக்கு தனது மகன் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்க வேண்டும். இதற்காகத்தான் இவர்கள் பாடுபடுகிறார்கள். நாட்டு மக்களுக்காக அல்ல.
சாதி வெறியை தூண்டிவிடுவது, குடும்ப உறுப்பினர்களை அதிகாரத்தில் அமர்த்துவது, ஊழல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே காங்கிரஸ் கட்சி நாட்டை 70 ஆண்டுகள் ஆட்சி செய்தது. ஆனால், சாதி வெறி, குடும்ப ஆட்சி, ஊழல் ஆகியவற்றை ஒழிக்க பிரதமர் மோடி பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்.
ஜம்மு காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று இன்றும் காங்கிரஸ் கட்சி கேட்கிறது. உங்கள் கனவில் கூட நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்பதை நான் அவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன். ஒருவேளை அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 370-வது பிரிவை அவர்கள் தொடக் கூடாது.
காங்கிரஸ் ஆட்சியின்போது பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள், நாட்டுக்குள் நுழைந்து குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினர். இருந்தும், மன்மோகன் சிங் எதுவும் பேசவில்லை. இந்தியாவில் உரி மற்றும் புல்வாமா தாக்குதல்களுக்குப் பிறகு, 10 நாட்களில் நாங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து அங்கு சர்ஜிக்கல் மற்றும் வான்வழித் தாக்குதல்களை நடத்தினோம். நக்சலிசத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த மத்தியப் பிரதேசத்தை பிரதமர் மோடி, அதில் இருந்து விடுவித்துள்ளார்” என்று அமித் ஷா பேசினார்.