மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் பழைய இந்தியாவை அடையாளம் காணவே முடியாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார வல்லுநருமான பரகால பிரபாகர் தெரிவித்துள்ளார்.
2024 மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகின்றன. நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், தலைவர்கள் மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் பழைய இந்தியாவை அடையாளம் காணவே முடியாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகால பிரபாகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது;
“மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியா தேர்தலையே மறந்துவிட வேண்டியதுதான். மோடியும் அவரது அமைச்சரவையும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாட்டின் அரசியலமைப்பும், வரைபடமும் மாறிவிடும். மீண்டும் உங்களால் பழைய இந்தியாவை அடையாளம் காணவே முடியாது. செங்கோட்டையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி வெறுப்புணர்வை வெளிப்படுத்துவார்.
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மணிப்பூர் மாநிலத்தில் குக்கி, மெய்தே இனத்தவர்களுக்கிடையிலான இன மோதலால் நிலவி வரும் அமைதியின்மை இந்தியா முழுவதும் சகஜமாகி விடும். பா.ஜ.க கொண்டு வந்த தேர்தல் பத்திர நிதி வழங்கல் முறை என்பது இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் அல்ல.
உலகின் மிகப்பெரிய ஊழல். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நடக்க இருக்கிற போட்டி, பா.ஜ.க.விற்கும், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் இடையிலானது” என இந்திய அரசியல் பொருளாதார வல்லுநரும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கணவருமான பரகால பிரபாகர் தெரிவித்துள்ளார்.