மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முடிவடைந்துள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா 21, காங்கிரஸ் 17, தேசியவாத காங்கிரஸ் 10 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, மகாராஷ்டிராவில் இந்தியா கூட்ணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளான உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளது.
இதன்படி, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய சங்லி தொகுதியை சிவ சேனா தக்க வைத்துக்கொண்டுள்ளது. அதேநேரத்தில், பிவாண்டி தொகுதியை காங்கிரஸ் எடுத்துக்கொண்டுள்ளது. மேலும், சிவ சேனாவின் பாரம்பரிய தொகுதியான மும்பை வடக்கு, இம்முறை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தொகுதிப் பங்கீடு நிறைவடைந்ததை அடுத்துப் பேசிய உத்தவ் தாக்கரே, “ஒவ்வொருவரும் போட்டியிட விரும்புகிறார்கள். அதில் தவறேதும் இல்லை. வெற்றியைக் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 மக்களவைத் தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 19-ல் நடைபெற உள்ள முதல் கட்டத் தேர்தலில் தொடங்கி மே 20-ம் தேதி நடைபெற உள்ள தேர்தலோடு தேர்தல் முடிவுக்கு வருகிறது.