மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார்.
தமிழகத்துக்கு இரண்டு நாள் பயணமாக வருகை தந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாமக்கல், திருவாரூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு நேற்றிரவு மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ள தங்கும் விடுதியில் தங்கினார்.
இதனையடுத்து இன்று காலை உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தரிசனம் செய்ய வருகை தந்தார். கோயிலுக்கு வருகை தந்த அமைச்சருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது.
மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்ற பின்னர் முக்குறுணி விநாயகரை தரிசனம் செய்த பின்னர் மீனாட்சி அம்மன் சன்னதியிலும் சுந்தரேஸ்வரர் சன்னதிக்கும் சென்று சிறப்பு தரிசனத்தில் ஈடுபட்டார். பின்னர் கோயிலில் உள்ள பொற்றாமரை குளத்தின் முன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்பதே என்டிஏ அரசாங்கத்தின் நோக்கமாகும். காங்கிரஸின் தேர்தல் அறிக்கை இந்தியாவை பின்னோக்கி அழைத்துச் செல்லும் என்று சொன்னால் அது மிகையாகாது. பாதுகாப்புத் துறையில் இந்தியா வலுவாக உருவெடுத்துள்ளது. ஒரு காலத்தில் நாம் இறக்குமதி செய்த ஆயுதங்கள், ஏவுகணைகள், டாங்கிகள் மற்றும் வெடிமருந்துகள் அனைத்தும் இப்போது இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 2014-ம் ஆண்டில், ரூ.600 கோடி மதிப்பிலான பாதுகாப்பு தளவாடங்களை நாம் ஏற்றுமதி செய்துள்ளோம். தற்போது நாம் ரூ.31 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக ஏற்றுமதி செய்கிறோம்.
கடந்த 5 ஆண்டுகளில், பாஜக அரசு ஒரு ஊழல் வழக்கைக்கூட எதிர்கொள்ளவில்லை. காங்கிரஸ் அரசின் பதவிக்காலத்தில், பாதுகாப்புத் துறையில் பல ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. காங்கிரஸ் ஆட்சியின் போது, பல பயங்கரவாத சம்பவங்கள் நடந்தன. சிறிய பயங்கரவாத சம்பவங்கள் நாட்டில் தொடர்ந்து நடப்பதாக அவர்கள் (காங்கிரஸ்) கூறுவார்கள். ஆனால், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், வலுவான நடவடிக்கைகளால் பயங்கரவாதப் பிரச்சினை கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டுவிட்டது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஒரு பிற்போக்குத்தனமான ஆவணம் மட்டுமே. பாஜக தேர்தல் அறிக்கை முற்போக்கானவை. இரண்டுக்கும் இடையே ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. அது (காங்கிரஸ் தேர்தல் அறிக்கை) வங்கியில் செல்லாத காசோலையைத் தவிர வேறொன்றுமில்லை.” என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
முன்னதாக அமைச்சரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக அஷ்டசக்தி மண்டபம் வழியாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேபோல், அமைச்சர் தங்கிய தங்கும் விடுதியில் இருந்து கோயில் வரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டதோடு கோயிலை சுற்றிய பகுதிகளிலும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு முழுமையான கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டது.
மீனாட்சி அம்மன் கோயிலில் 30 நிமிட சாமி தரிசனம் முடித்த பின்னர் மதுரை விமான நிலையத்துக்கு அமைச்சர் புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து தனி விமானம் மூலமாக அசாம் புறப்பட்டுச் சென்றார்.