மக்களவைத் தேர்தலில் மத்திய அமைச்சருக்கு எதிராக களமிறங்கிய மடாதிபதி : எடியூரப்பா மூலம் பாஜக தூது

கர்நாடகாவில் மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு எதிராக லிங்காயத்து மடாதிபதி ஃபக்கீரா திங்களேஸ்வர் சுவாமி சுயேச்சையாக போட்டியிடுவதால் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் உள்ள தார்வாட் தொகுதியில் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி 5-ம் முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வினோத் அசுதி நிறுத்தப்பட்டுள்ளார். பிரஹலாத் ஜோஷி ஏற்கெனவே இந்த தொகுதியில் 4 முறை வெற்றி பெற்றுள்ளதால், இந்த முறையும் எளிதாக வெற்றி பெற்றுவிடுவார் என பாஜக மேலிடத் தலைவர்கள் கருதினர்.

இந்நிலையில் ஸ்ரீஹட்டி ஃபக்கீரேஷ்வரர் மடத்தின் மடாதிபதி ஃபக்கீரா திங்களேஸ்வர் சுவாமி கடந்த வாரம் 100க்கும் மேற்பட்ட‌ லிங்காயத்து மடாதிபதிகளுடன் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து தார்வாட் தொகுதியின் பாஜக வேட்பாளரை மாற்ற வேண்டும் என மனு அளித்தனர். பிரஹலாத் ஜோஷியை மாற்றாவிடில் லிங்காயத்து மடாதிபதிகள் ஆதரிக்க மாட்டோம் என பகிரங்கமாக அறிவித்தனர்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு கடிதம் அனுப்பினர். ஆனால் எடியூரப்பா, பாஜக வேட்பாளரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்தார். இதுகுறித்து ஃபக்கீரா திங்களேஸ்வர் சுவாமி நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,” பாஜகவை பொறுத்தவரை பிரஹலாத் ஜோஷி ஹீரோவாக இருக்கலாம். ஆனால் தொகுதியை பொறுத்தவரை அவர் ஜீரோ. இந்த தொகுதியில் 4 முறை வெற்றி பெற்றும் இந்த தொகுதிக்கு அவர் எதையுமே செய்யவில்லை. அதனால் அவரை மாற்ற வேண்டும் என பாஜக மேலிடத்துக்கு கோரிக்கை விடுத்தோம். ஆனால் அவர்கள் பிரஹலாத் ஜோஷியை மாற்றவில்லை.

லிங்காயத்து மக்கள் பாஜகவை தொடர்ந்து ஆதரித்தாலும் அவர்கள் எங்களை மதிப்பதில்லை. காங்கிரஸாரும் லிங்காயத்து மக்களுக்கு எதையும் செய்யவில்லை. இரு கட்சிகளும் ரகசிய கூட்டணி அமைத்துக்கொண்டு லிங்காயத்து மக்களுக்கு எதிராக செயல்படுகின்றன. லிங்காயத்து மக்கள் தொகைக்கு ஏற்ப வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை. ஆனால் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் பிராமணர்களுக்கு 3 தொகுதிகளை பாஜக அளித்துள்ளது.

எனவே லிங்காயத்து மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க நான் இந்த தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட போகிறேன். மக்களின் நலனுக்காக தர்மயுத்தத்தை தொடங்குகிறேன். ஆன்மீகத்தில் நடத்திய தர்ம யுத்தத்தை இனி அரசியலில் செய்ய போகிறேன்”என்றார்.

பாஜக வேட்பாளருக்கு எதிராக லிங்காயத்து மடாதிபதி களமிறங்கியுள்ளதால் பாஜகவின் வாக்குகள் பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் வேட்பாளருக்கு சாதகமான சூழல் ஏற்படும் என்பதால் பாஜக மேலிடத் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். லிங்காயத்து வகுப்பை சேர்ந்த மூத்த தலைவர்களான எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் மூலம் லிங்காயத்து மடாதிபதிகளை சமாதானப்படுத்து முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் பிரஹலாத் ஜோஷி, ” ஃபக்கீரா திங்களேஸ்வர் சுவாமி என்ன பேசினாலும் நான் கருத்து சொல்ல மாட்டேன். அவரது வார்த்தைகள் எல்லாம் எனக்கு ஆசீர்வாதம் தான்” என பதிலளித்தார்.