டெல்லியில் இருந்து வெளிநாடுகளுக்கு போதைப்பொருட்களை கடத்திய வழக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சூடோ பெட்ரின் என்கிற போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருளை கடத்தி ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் பணத்தை சுருட்டியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஜாபர் சாதிக் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். தற்போது அவர் சிறையில் உள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் சட்டவிரோதமாக பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறையினர் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அது தொடர்பான தகவல்கள் மற்றும் ஆதாரங்களையும் திரட்டி வந்தனர். இந்த நிலையில் ஜாபர் சாதிக்கின் நண்பரும், தொழில் பங்குதாரருமான டைரக்டர் அமீரிடம் கடந்த 2-ந்தேதி டெல்லியில் விசாரணை நடத்தப்பட்டது. போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி அமீரை நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். 10½ மணி நேர விசாரணைக்கு பிறகு அமீர் விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தங்களது நேரடி விசாரணையை இன்று தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக சென்னையில் 35 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் துணை ராணுவ படை பாதுகாப்புடன் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஜாபர் சாதிக்குடன் இணைந்து ஓட்டல் ஒன்றை நடத்தி வந்த இயக்குனர் அமீர் ‘இறைவன் மிகப்பெரியவன்’ என்கிற சினிமா படத்தையும் எடுத்து வந்தார். இந்த படத்தின் தயாரிப்பாளராக ஜாபர் சாதிக்கும், இயக்குனராக அமீரும் இருந்தனர். இந்த படத்துக்கான படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில்தான் ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கினார்.
இதனால் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இயக்குனர் அமீருக்கு தொடர்பு இருக்கலாமோ? என்கிற சந்தேகத்தின் பேரிலேயே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தங்களது முதல்கட்ட விசாரணையை நடத்தி முடித்து உள்ள நிலையில்தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமீர் வீட்டில் சோதனை நடத்தி வருகிறார்கள். இன்று காலையில் 7 அதிகாரிகள் அமீர் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது அமீரின் வீட்டில் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன. அவைகளை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜாபர் சாதிக்கின் சாந்தோம் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த வீட்டில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஏற்கனவே சோதனை நடத்தி வீட்டை பூட்டி ‘சீல்’ வைத்திருந்தனர்.
கோர்ட்டு உத்தரவின்பேரில் 2 நாட்களுக்கு முன்பு தான் ‘சீல்’ அகற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜாபர் சாதிக்கின் வீட்டிலும் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையிலும் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் உள்ள புஹாரி ஓட்டலிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோன்று ஜாபர் சாதிக்குடன் நெருங்கிய தொடர்பில் இருந்த தொழில் அதிபர்கள் வீடு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ள நிலையில் பணப்பட்டுவாடாவை தடுக்க வருமான வரித்துறை அதிகாரிகள் ஏற்கனவே சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல இடங்களில் சோதனை நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்தக்கட்டமாக அமலாக்கத்துறையினர் மேலும் பல முக்கிய பிரமுகர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதனால் தேர்தல் நெருங்கும் நேரத்தில் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.