சிறுத்தை தேடல் பணி : தஞ்சாவூர் மாவட்ட எல்லையில் 25 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

மயிலாடுதுறையில் நடமாடும் சிறுத்தையைக் கண்டுபிடிக்க தஞ்சாவூர் மாவட்ட எல்லையில் 25 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக கும்பகோணம் வனச் சரக அலுவலர் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் ஏப்.2-ம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் இருந்ததைப் பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வுச் செய்து வனத் துறை, தீயணைப்புத் துறை,காவல் துறையினர் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அந்த சிறுத்தை தஞ்சாவூர் மாவட்ட எல்லையான திருவிடைமருதூர் வட்டம், செ.புதூர் பகுதிக்குள் வந்து விட்டதாக கூறப்பட்டது. ஆனால், இந்த மாவட்ட எல்லையில் இருந்து 3 கி.மீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ள காஞ்சிவாய் பகுதியில் கடைசியாக கண்டறியப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, கும்பகோணம் வனச் சரக அலுவலர் பொன்னுசாமி கூறியது: “காஞ்சிவாயில் உள்ள நண்டலாற்றில், சிறுத்தை படுத்துறங்கிய பிறகு எழுந்து நடந்து சென்றதற்கான தடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சென்று பார்த்தபோது, சிறுத்தை சென்ற இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தஞ்சாவூர் மாவட்ட எல்லையான செ.புதூரில் இருந்து காஞ்சிவாய் வரை 25 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன. மேலும், ஆடு, கோழி, பன்றிகளை உள்ளே அடைத்து 5 கூண்டுகளையும் ஆங்காங்கே வைத்துள்ளோம்.

நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் கடந்த ஆண்டு ஜனவரியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததாகத் தேடப்பட்டு வந்தது. அந்தச் சிறுத்தை காவிரி கரையோரம் வழியாக இங்கு வந்திருக்க வாய்ப்புள்ளது. அதேபோல், இந்த சிறுத்தை, மனிதர்களையோ அல்லது கால்நடைகளையோ கொல்லவில்லை. அவ்வப்போது பசிக்கு கிடைக்கும் உணவைச் சாப்பிட்டு விட்டு, புதருக்குள் பதுங்கிட வாய்ப்புள்ளது.

தற்போது, தஞ்சாவூர் மாவட்டத்துக்குள் நுழைந்து விட்டதாக கூறப்படுவதால், 15-க்கும் மேற்பட்ட வனச்சரகர்கள் 8-ம் தேதி முதல் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, சிறுத்தை தொடர்பான வதந்திகளையோ செய்திகளையோ, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பரப்ப வேண்டாம் ” என்று அவர் கூறினார்.