உத்தரப்பிரதேசம் அமேதியில் காங்கிரஸ் வேட்பாளராக காந்தி குடும்பத்தின் மருமகன் ராபர்ட் வதேரா போட்டியிட விரும்புகிறார். அங்கு தன்னால் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியை அதிக வாக்குகளில் வெற்றி பெற இயலும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸின் தேசியப் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா. தொழிலதிபரான இவர், காங்கிரஸ் கட்சியில் இன்னும் அதிகாரபூர்வமாக இணையவில்லை. எனினும், காங்கிரஸ் பிரச்சாரங்களில் தனது மனைவி பிரியங்கா மற்றும் மைத்துனர் ராகுல் காந்தியுடன் இணைந்து தோன்றுவது உண்டு. இச்சூழலில் அவர் முதன்முறையாக தேர்தலில் போட்டியிட விரும்புவது வெளியாகி உள்ளது.
தற்போது நடைபெறும் மக்களவைத் தேர்தலில் ராபர்ட், உ.பி.யின் அமேதியில் போட்டியிட விரும்புகிறார். இந்த விருப்பத்தை அவர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த கேள்விக்கு தொழிலதிபர் ராபர்ட் அளித்த பதிலில், “கடந்த 1990 முதல் நான் காங்கிரஸுக்காக அமேதியில் பிரச்சாரம் செய்து வருகிறேன். இதனால், நான் அமேதியில் போட்டியிட வேண்டும் என அத்தொகுதிவாசிகளிடம் இருந்து குரல்கள் எழுகின்றன. நான் தீவிர அரசியலில் இறங்கவேண்டும் எனவும் நாடு முழுவதிலுமிருந்தும் அரசியல் நண்பர்களும் வலியுறுத்துகின்றனர்.
நான் காந்தி குடும்பத்தின் உறுப்பினர் என்பதால் அமேதியில் போட்டியிட சுவரொட்டிகளும் பல இடங்களில் ஒட்டப்பட்டு வருகின்றன. இந்நாட்டுக்கு காந்தி குடும்பம் எவ்வளவு செய்துள்ளது என்பதை அவர்கள் கண்டிருக்கிறார்கள். இதற்காக எனது குடும்பம் ஆசீர்வதித்தால் நான் கண்டிப்பாக தீவிர அரசியலில் இறங்குவேன். என்னால் மாற்றம் கொண்டுவர முடியும் எனக் காங்கிரஸும் விரும்பினால் நான் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடத் தயார்” எனத் தெரிவித்துள்ளார்.
உ.பி.யில் முக்கிய எதிர்கட்சியான சமாஜ்வாதியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இதில் காங்கிரஸுக்கு கிடைத்த 19 தொகுதிகளில் 17-ல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். இன்னும் ரேபரேலி மற்றும் அமேதிக்கு வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவிக்கவில்லை. காங்கிரஸின் மூத்த தலைவரான சோனியா காந்தி, ரேபரேலியிலிருந்து ராஜினாமா செய்து மாநிலங்கவை எம்.பி. ஆகியுள்ளார்.
முக்கியத் தலைவரான ராகுல் காந்தி 2004 முதல் எம்பியாக இருந்த அந்தத் தொகுதியில் கடந்த 2019 இல் பாஜகவின் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார். இதனால், அவர் மீண்டும் அமேதியில் இரண்டாவது தொகுதியாகப் போட்டியிடுவரா? எனும் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில், பிரியங்காவின் பெயரும் அமேதி, ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் பேசப்பட்டு வருகிறது. இங்கு வரும் மே 20 இல் வாக்குப்பதிவு நடைபெறுவதால் ஏப்ரல் 10-க்கும் முன்பாக காங்கிரஸ் முடிவு எடுக்க வேண்டி உள்ளது.