தருமபுரம் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வெள்ளி செங்கோல் வழங்கி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற ஆசிகளை வழங்கினார்.
தமிழ்நாட்டின் மிக தொன்மையான ஆதீன மடங்களில் தருமபுரம் ஆதீனம் மிக முக்கியமானதாகும். இந்த மடத்தின் 27 வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் இருந்து வருகிறார். இவரை சந்தித்து தமிழகம் மற்றும் இந்தியாவின் முக்கிய அரசியல்வாதிகள் ஆசி பெறுவது வழக்கம். புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டபோது இவரது தலைமையில் தமிழ்நாட்டின் முக்கிய மடாதிபதிகள் டெல்லி சென்று பிரதமரிடம் செங்கோல் வழங்கினார்கள்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கு எதிராக மதுரை ஆதீனம் உள்ளிட்டவர்கள் அவ்வப்போது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், தருமபுரம் ஆதீனம் மட்டும் சார்பு நிலை இல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் இணக்கமாக நடந்து கொள்கிறார். அண்மையில் மடாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தது. இதனால் திமுக அரசுக்கும் தருமபுரம் ஆதீனத்திற்கும் இடையே நல்லுறவு பேணப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று கடலூரில் தங்கி இருந்த முதல்வர் ஸ்டாலினை தருமபுரம் ஆதீன மடாதிபதி நேரில் சந்தித்து பேசி உள்ளார். மக்களவைத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது எனும் முழு வெற்றியைப் பெற திட்டமிட்டு உழைத்து வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதீனம் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், ஆதீனம் சார்பில் வெள்ளி செங்கோலை ஸ்டாலினிடம் வழங்கி ஆசி கூறினார்.