‘முதல்வர் பொறுப்பிலிருந்து கேஜ்ரிவாலை நீக்க வேண்டும்’ ஆம் ஆத்மி முன்னாள் எம்எல்ஏ நீதிமன்றத்தில் முறையீடு

டெல்லி முதல்வர் பொறுப்பிலிருந்து அரவிந்த் கேஜ்ரிவாலை நீக்க வேண்டும் என பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கோரி வருவதன் மத்தியில், ஆம் ஆத்மி முன்னாள் எம்எல்ஏ ஒருவரே, கேஜ்ரிவால் நீக்கம் கோரி நீதிமன்றத்தை அணுகி உள்ளார்.

டெல்லி கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் மார்ச் 21 அன்று கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், முறைப்படி முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்துகிறது. ஆனால் அவர் சிறையில் இருந்தாலும், டெல்லி முதல்வராகவே தொடர்வார் என்று ஆம் ஆத்மி பிடிவாதம் பிடிக்கிறது.

சிறையில் இருந்தபடியே முதல்வருக்கான பொறுப்புகளை அரவிந்த் கேஜ்ரிவால் தொடர, நீதிமன்றத்தை அணுகி சிறப்பு அனுமதி பெறுவோம் என ஆம் ஆத்மி மூத்த தலைவரும், பஞ்சாப் முதல்வருமான பகவந்த் மான் தெரிவித்தார். ஆனால் அவர்களை முந்திக்கொண்டு, ஆம் ஆத்மி முன்னாள் எம்எல்ஏ-வான சந்தீப் குமார் என்பவர், சிறையிலிருக்கும் அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வர் பொறுப்பில் தொடர்வதை தடுக்க வேண்டும் என்றும், அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், ஒரு முதல்வராக தனது கடமையை செய்வதற்கு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அரவிந்த் கேஜ்ரிவால் தற்போது தகுதியற்றவர் ஆகியுள்ளதாக சந்தீப் குமார் தனது மனுவில் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் ஆணையின்படி, ஒரு முதல்வர் சிறையில் இருக்கும்போது திறம்பட செயல்பட முடியாது. அரசியலமைப்பின் 239AA(4) என்ற பிரிவை சந்தீப் குமார் மனு எடுத்துக்காட்டுகிறது. இது சட்டமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் உள்ள விஷயங்களில் துணைநிலை ஆளுநருக்கு உதவி மற்றும் ஆலோசனை வழங்குவதில் முதல்வர் தலைமையிலான அமைச்சர்கள் குழுவின் பங்கைக் கோடிட்டுக் காட்டுகிறது.

அரசியலமைப்பின் இந்த பிரிவின் கீழ், முதல்வராக பதவி வகிப்பதற்கு அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உள்ள அதிகாரம் மற்றும் தகுதிகளை கேள்விக்குட்படுத்தி, கெஜ்ரிவாலுக்கு எதிரான உத்தரவை பிறப்பிக்குமாறு சந்தீப் குமாரின் மனு கோருகிறது. இந்த நீதிமன்ற அஸ்திரம், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேஜ்ரிவால், முதல்வராக பதவி வகிப்பதன் சட்ட சவால்களை அதிகரித்துள்ளது. இதற்கு முன்னதாகவும் அவர் முதல்வராக பதவியில் தொடர்வதற்கு எதிராக பொதுநல வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. ஆனபோதும் அவை டெல்லி உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டன.

முதல்வர் பதவியில் நீடிப்பது என்ற கேஜ்ரிவாலின் தனிப்பட்ட முடிவை மேற்கோள் காட்டிய நீதிமன்ற அமர்வு, கைது செய்யப்பட்டவர் முதல்வர் பதவியில் நீடிப்பதைத் தடுக்கும் சட்டரீதியான தடைகள் இல்லாததை விளக்கியது. இந்த விவகாரம் நீதித்துறை தலையீட்டை விட, மாநில அமைப்புகளின் ஏனைய அதிகார வரம்புக்குள் வருவதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இந்த சூழலில் கேஜ்ரிவாலை முதல்வர் பொறுப்பிலிருந்து நீக்கக்கோரும் ஆம் ஆத்மி முன்னாள் எம்எல்ஏ மனுவின் அடிப்படையிலான வழக்கு, நாளை (ஏப்ரல் 8) நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் முன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு திட்டமிடப்பட்டுள்ளது.