மேற்குவங்க மாநிலம் புர்பா மேதினிபூர் மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு வழக்கினை விசாரிக்கச் சென்ற தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் என்ஐஏ அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்தவர்கள் கூறுகையில், “குண்டு வெடிப்பு வழக்கு குறித்து விசாரணை நடத்த மேற்கு வங்கத்தின் புர்பா மேதினிபூருக்கு இன்று காலை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஒரு வாகனத்தில் வந்தனர். வழக்குடன் தொடர்புடைய மோனோப்ரோடோ ஜனா என்பவரை கைது செய்து வாகனத்தில் அழைத்துச் செல்ல முயன்றபோது வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தேசிய புலனாய்வு அதிகாரிகள் அந்த நபரை அழைத்துச் செல்லவிடாமல் வாகனத்தை மறித்தபடி உள்ளூர்வாசிகள் நின்றனர். அவர்கள் வாகனத்தின் மீது கற்களை எறிந்தும் தாக்குதல் நடத்தினர்” என்று தெரிவித்தனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக உள்ளூர் காவல் நிலையத்தில் மோனோப்ரோடோ ஜனா அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அடையாளம் தெரியாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறுகையில், “சோதனை குறித்து உள்ளூர் போலீஸாருக்கு ஏற்கெனவே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது என்றாலும் அந்தப் பகுதியில் முறையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படவில்லை” என்று தெரிவித்தனர்.
போலீஸார் தெரிவிக்கையில், “என்ஐஏ அதிகாரிகள் குழு அவர்கள் குறிப்பிட்ட நேரத்தை விட முன்னதாக காலை 5.30 மணிக்கு பூபதிநகருக்குச் சென்றுள்ளனர். அதற்கு பின்னர் பாதுகாப்பை அதிகப்படுத்த அழைப்பு விடுத்தனர். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. தாக்குதல் குறித்து விசாரணை நடக்கிறது” என்றனர்.
பூபதிநகர் காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட நர்யாபிலா கிராமத்தில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் வீட்டில் கடந்த 2022 டிசம்பரில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கு குறித்த விசாரணையை 2023ம் ஆண்டு என்ஐஏ கையில் எடுத்தது. முன்னதாக ஜன.5-ம் தேதி தற்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு, சிறையில் உள்ள ஷேக் ஷாஜகானின் வீட்டில் சோதனை நடத்தச் சென்ற அமலாக்த்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு பின்னர் என்ஐஏ அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.