“அரசியல் ரீதியாக ஆம் ஆத்மியை எதிர்கொள்ள விரும்பினால் மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கு பின்னால் ஒளியாமல் நீங்கள் செய்த பணிகளைச் சொல்லி தேர்தலை சந்தியுங்கள்” என்று பாஜகவுக்கு டெல்லி அமைச்சர் அதிஷி சவால் விடுத்துள்ளார். மேலும் ஊழல் வழக்கில் பணம் பெறப்பட்டுள்ளது என்பதை அமலாக்கத் துறை இன்னும் நிரூபிக்கவில்லை என்றாலும், ஆம் ஆத்மி தலைவர்கள் மத்திய அமைப்பால் கைது செய்யப்படுவது தொடர்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக டெல்லி கல்வி அமைச்சர் அதிஷி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஊழல் நடந்ததாகக் கூறப்படும் மதுபான கொள்கை வழக்கில் பணம் பெறப்பட்டதா என அமலாக்கத் துறை இன்னும் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுக்கு இதில் ஏதாவது தொடர்பு இருக்காதா என்று சோதனை நடத்தி வருகிறது. என்றாலும் இது வரை அவர்களின் வீட்டுகளில் இருந்து ஒரு ரூபாய் கூட கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆம் ஆத்மி கட்சி பணம் பெற்றதற்கான ஆதாரம் எங்கே என்று அமலாக்கத் துறையிடம் உச்ச நீதிமன்றம் தொடர்ந்து கேட்டு வருகிறது. ஆனால் அமலாக்கத் துறை அதற்கு இன்னும் பதில் கூறவில்லை. பணம் பெறப்பட்டது இன்னும் நிரூபிக்கப்படவில்லை, அது இன்னும் விவாதமாகவே உள்ளது. என்றாலும் வழக்கு தொடர்பாக பல ஆம் ஆத்மி தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என நீதிபதி சஞ்ஜீவ் கண்ணா தெரிவித்துள்ளார்.
அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை, இந்திய தேர்தல் ஆணையம் போன்ற மத்திய அமைப்புகள் மூலமாக ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக பல பொய் வழக்குகளை பாஜக பதிவு செய்துள்ளது. பாஜக கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பிய கோவா வழக்கும் இதுபோல ஒன்றுதான். ஆனால் நேற்று இந்த வழக்கில் அடிப்படை இல்லை எனக் கூறி கோவா நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.
நான் பாஜகவுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அரசியல் ரீதியாக நீங்கள் ஆம் ஆத்மி கட்சியை எதிர்கொள்ள விரும்பினால் புலனாய்வு அமைப்புகளுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு தேர்தலைச் சந்திக்கக் கூடாது. உங்களுக்கு தைரியம் இருந்தால் நீங்கள் செய்த பணிகளின் அடிப்படையில் தேர்தல் களத்தைச் சந்திக்க முன்வாருங்கள்” என்று தெரிவித்தார்.
அதிஷியின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ள பாஜகவின் வீரேந்த்ரா சச்தேவ், “மதுபான ஊழல் வழக்கில் பல திரைகள் விலக்கப்பட்டுக்கொண்டு வருகிறது. கே. கவிதாவிடம் (பிஆர்எஸ் தலவைர்) சிபிஐ விசாரணை நடத்தும் போது பல விஷயங்கள் வெளி வரும், பல பேருடைய முகத்திரைகள் கிழிக்கப்படும் என நான் கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.