“இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுவிட்டு பாகிஸ்தானுக்கு தீவிரவாதிகள் தப்பி ஓடினால் அங்கேயே சென்று அவர்களை அழிப்போம்” என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருக்கிறார்.
முன்னதாக பிரிட்டனின் புகழ்பெற்ற கார்டியன் பத்திரிகையில், “இந்தியா கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தானில் 20 பேரை கொன்றுள்ளது. அந்நிய மண்ணில் வாழும் தீவிரவாதிகளை வீழ்த்துதல் என்ற விரிவான தீவிரவாத ஒழிப்புத் திட்டத்தின் கீழ் இதனை இந்தியா செய்துள்ளது” என்று செய்தி வெளியிட்டிருந்தது. இது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “இங்கே தீவிரவாதச் செயல்களைச் செய்துவிட்டு தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்கு தப்பி ஓடினாலும் நாங்கள் அங்கேயே சென்று அவர்களை வீழ்த்துவோம். இந்தியா எப்போதுமே அண்டை நாடுகளுடன் நல்லுறவு பேணவே விரும்புகிறது. ஆனால் எவரேனும் இந்தியா மீது மீண்டும் மீண்டும் கோபப் பார்வையை வீசினால், இந்தியாவில் தீவிரவாதத்தை விதைக்க முயன்றால் நாங்கள் அவர்களை விடமாட்டோம்.” என்றார்.
முன்னதாக இந்த அறிக்கை குறித்து ஊடக கேள்விகளுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகமோ, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகமோ பதிலுரைக்க மறுத்துவிட்டன. இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இக்கருத்தினை தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் பாகிஸ்தான் மண்ணில் இந்திய ஏஜென்ட்டுகள் இரு பாகிஸ்தானியர்களைக் கொன்றதாக அந்நாடு குற்றஞ்சாட்டியது. ஆனால் இந்தியாவோ “இது தவறானது, தீய நோக்கம் கொண்டது” என விமர்சித்தது. ஆனால் தற்போது எல்லை கடந்து தீவிரவாதிகளை அழிப்போம் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
கடந்த 2019-ல் புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வாகனத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் உறவில் மிக மோசமான விரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா வான்வழித் தாக்குதல் நடத்தியதும் நினைவுகூரத்தக்கது.
இப்போது கார்டியன் பத்திரிகை அறிக்கை பாகிஸ்தானில் இந்தியா நடத்திய தீவிரவாத ஒழிப்பு தாக்குதல் பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் கனடா தங்கள் நாட்டில் வசிக்கும் சீக்கிய பிரிவினைவாத தலைவரை ரா ஏஜன்ட்டுகள் மூலம் இந்திய அரசு கொன்றதாகக் குற்றஞ்சாட்டியது. அதேபோல் கடந்த நவம்பரில் அமெரிக்காவும் இந்திய ஏஜென்ட்டுகளின் சீக்கிய பிரிவினைவாத தலைவர் கொலை சதித் திட்டத்தை தங்கள் நாடு முறியடித்ததாகவும் தெரிவித்தது. கனடா, அமெரிக்கா என மேற்கத்திய நாடுகள் இந்தியாவின் எல்லை கடந்த தீவிரவாத அழிப்பு முயற்சிகள், நடவடிக்கைகள் பற்றி கூறிய நிலையில் பிரிட்டனின் ‘கார்டியன்’ பத்திரிகையில் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான அறிக்கை கவனம் பெறுகிறது. கூடவே மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கருத்து விவாதத்துக்கு வழிவகுக்கும் பொருளாகியிருக்கிறது.