மக்கள் பணத்திற்கு விலை போக வேண்டாம் : தேமுதிக விஜய பிரபாகரன் வேண்டுகோள்

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், “விருதுநகரை பொறுத்தவரை மற்ற கட்சியினர் பணம் கொடுத்தாலும், கொடுக்கவில்லை என்றாலும் மக்கள் முரசு சின்னத்திற்கு முழு ஆதரவு தெரிவிப்பார்கள்” என வேட்பாளர் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் வேட்பாளராக விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளரான கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டனர். திருப்பரங்குன்றம் சுப்ரமணியசாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு கொட்டு முரசு சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “விருதுநகர் தொகுதியில் கைத்தறி பூங்கா அமைக்கப்படும். எய்ம்ஸ் மருத்துவமனை வெறும் செங்கலை காட்டி திரியாமல், கட்டுமானத்தை விரைவுபடுத்த நாடாளுமன்றத்தில் முதல் குரலாக எழுப்பப்படும். மக்களுக்கு பிரச்சனையாக இருக்கும் சுங்கச்சாவடி அகற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுத்து ஏற்பாடு செய்வார்” என்றார்.

பின்னர் பேசிய விஜய பிரபாகரன், “ விருதுநகர் மக்களவைத் தொகுதியில் ஆறு சட்டப்பேரவைத் தொகுதி்கள் உள்ளன. ஒவ்வொரு தொகுதிகளிலும் ஒவ்வொரு பிரச்சினை உள்ளது. ஒவ்வொரு கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதே எனது குறிக்கோளாக இருக்கும். பண அரசியலை வெறுக்கிறோம். அதை செய்பவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியும். விருதுநகர் தொகுதியை பொறுத்தவரை பணம் கொடுத்தாலும் கொடுக்கவில்லை என்றாலும் மக்கள் முரசு சின்னத்திற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்ற தொகுதியிலும் மக்கள் பணத்திற்கு விலை போக வேண்டாம்” என்றார்.