மயிலாடுதுறை அருகே சித்தர்க்காட்டில் ஆடு ஒன்று கடித்து குதறிய நிலையில் உயிரிழந்து கிடந்தது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
மயிலாடுதுறை அருகே கூறைநாடு செம்மங்குளம் சாலையில் கடந்த புதன்கிழமை நள்ளிரவு 11 மணியளவில் சிறுத்தை ஓடிய காட்சி சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த தகவல் அறிந்ததும் கூறைநாடு போலீசார் மற்றும் மாவட்ட வன உயிரின காப்பாளர் டேனியல் ஜோசப் தலைமையிலான வன அலுவலர்கள் வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் வலைகளை எடுத்து வந்து செம்மங்குளம் பகுதி முழுவதும் சிறுத்தையை தேடினர். ஆனாலும் சிறுத்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலியை பிடிக்க 10 குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையை பிடிக்க 3வது நாளாக வனத்துறை தீவிரம் காட்டி வருகிறது. சிறுத்தைப்புலி நடமாட்டம் காரணமாக மயிலாடுதுறை நகரில் 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. விரைவில் சிறுத்தைப்புலி பிடிக்கப்படும்; மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் சித்தர்க்காட்டில் உள்ள தண்டபாணி செட்டி தெருவில் ஆடு ஒன்று கடித்து குதறிய நிலையில் உயிரிழந்து கிடந்தது.
இது குறித்து அதிகாரிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். உயிரிழந்த ஆட்டை நேரில் பார்வையிட்டு வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். திருச்சி மண்டல தலைமை வன அலுவலர் சதீஷ், மாவட்ட வனத்துறை அதிகாரி அபிஷேக் டோமர் ஆகியோர் இணைந்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். ஆரோக்கியநாதபுரம், சித்தர்காடு உள்ளிட்ட இடங்களில் கூண்டுகளை வைத்து வனத்துறை கண்காணித்து வருகிறது.