கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை இன்று சூலூர், காங்கேயம் பாளையம், சாமளாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது:- கோவை பாராளுமன்ற தொகுதியின் எம்.பி.யாக இருந்தவர் மத்திய அரசின் திட்டங்களை இங்கு கொண்டு வர எந்தவித முனைப்பும் காட்டவில்லை. கோவையின் வளர்ச்சியில் அவருக்கு அக்கறை இல்லை.
பிரதமர் மோடி 10 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சி நடத்தி வந்துள்ளார். வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் 400 எம்.பிக்களை பெற்று மிக வலிமையுடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக அரியணை ஏறுவார். இந்த முறை பிரதமர் மோடியின் ஆட்சியை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தங்களுக்கு தேவையானதை பெற்று கொள்ள இங்கு போட்டியிடும் என்னை வெற்றி பெற செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்.
தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படப்போவது நிச்சயம். இது வருகிற 19-ந் தேதியில் இருந்து தொடங்குகிறது. மாற்றத்தை விரும்பும் கோவை மக்கள் மாற்றத்தின் பக்கம் நிற்பீர்கள். எனக்கு ஆதரவு கொடுப்பீர்கள் என நம்புகிறோம். இந்த பகுதியில் அரசு வேலை செய்கிறதோ இல்லையோ மக்கள் தங்கள் வேலைகளை செய்து தாங்களாகவே முன்னேறி கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.
மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் விசைத்தறி தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர். நான் வெற்றி பெற்றதும் விசைத்தறி பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். மீண்டும் பவர்டெக்ஸ் திட்டத்தை கொண்டு வருவோம்.
கோவையில் கடந்த 2 மாதங்களாக கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இங்கு நிலவக்கூடிய குடிநீர் பிரச்சனைக்கு மாநில அரசு எந்த தீர்வும் காணவில்லை. குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். கோவையின் நொய்யல் நதியை மீட்டெடுப்போம். என்று கூறினார்.