“என்னை நீக்கும் முன்பே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிவிட்டேன்” – சஞ்சய் நிருபம் 

காங்கிரஸ் கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்ட சஞ்சய் நிருபம், தனது ராஜினாமா கடிதம் கிடைத்த பின்னரே தன்னை கட்சி நீக்கியதாக தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் (உத்தவ் அணி) காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்ததை சஞ்சய் நிருபம் விமர்சித்த சில நாட்களுக்குப் பின்னர் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இது குறித்து கட்சித் தலைவர் கார்கேவுக்கு தான் அனுப்பிய ராஜினாமா கடிதத்தின் மின்னஞ்சல் ஸ்க்ரீன் ஷாட்டை எக்ஸ் பக்கத்தில் சஞ்சய் இன்று பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில் அவர், “நேற்றிரவு எனது ராஜினாமா கடிதம் கிடைத்த பின்னரே என்னை வெளியேற்றும் முடிவை கட்சி எடுத்திருப்பதாக தெரிகிறது. தகவலுக்காக இதனைப் பகிர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். மும்பை வடமேற்கு தொகுதி உள்ளிட்ட. மும்பையின் மக்களவைத் தொகுதிகளுக்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி வேட்பாளர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து சஞ்சய் நிருபம், மாநில காங்கிரஸ் கட்சியை சாடியிருந்தார். அவர் “மகாராஷ்டிராவில் 17 வேட்பாளர்களை தன்னிச்சையாக சிவசேனா (உத்தவ்) அணி அறிவித்தது. இது மும்பையில் காங்கிரஸ் கட்சியை ஒழிக்கும் சதி” எனக் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து சஞ்சய் நிருபமை காங்கிரஸ் கட்சி நேற்று நீக்கியது. கட்சியிலிருந்து 6 ஆண்டு காலம் அவரை நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது மும்பை வடமேற்கு தொகுதியில் போட்டியிட்ட சஞ்சய் நிருபம், பாஜகவின் கோபால் ஷெட்டியிடம் தோல்வியடைந்திருந்தார். எனினும், இந்தத் தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். இதனிடையே, அந்தத் தொகுதியில் தனது வேட்பாளரை சிவசேனா (உத்தவ் அணி) அறிவித்ததால் அவரது அரசியல் கணக்குக்கு சிக்கல் ஏற்பட்டது.