“இன்றைக்கும்கூட கச்சத்தீவுக்கு ராமநாதபுரம் மன்னர் உரிமை கோர முடியும்” – அமைச்சர் ரகுபதி

“கச்சத்தீவு ராமநாதபுரம் மன்னருக்கு சொந்தமானது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. இன்றைக்கும்கூட ராமநாதபுரம் மன்னர் கச்சத்தீவுக்கு உரிமை கோர முடியும்” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக கூறும்போது, “பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது பிரதமர் மோடி கச்சத்தீவை மறந்துவிட்டார்.

கச்சத்தீவை தாரைவார்க்க எந்த இடத்திலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒப்புக்கொள்ளவில்லை. கச்சத்தீவை பற்றி பேச வந்த மத்திய அரசு குழுவினரிடம் இரண்டு ஆண்டுகளுக்கு அந்த பிரச்சினையை தள்ளிப்போட முடியுமா என்று தான் கருணாநிதி கேட்டாரே தவிர, தமிழக அரசு சார்பில் அவர் சம்மதம் தெரிவித்தார் என்பதற்கு எந்த இடத்திலும் ஆதாரம் இல்லை.

கச்சத்தீவு ராமநாதபுரம் மன்னருக்கு சொந்தமானது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. இந்திய அரசு அன்றைக்கு இன்னொருவர் சொத்தை தான் தாரை வார்த்தது. இது தவறு. ஆனால், ராமநாதபுரம் மன்னர் ஆட்சேபனை தெரிவித்திருக்கலாம். இன்றைக்கும்கூட ராமநாதபுரம் மன்னர் கச்சத்தீவுவுக்கு உரிமை கோர முடியும். இது இரு நாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. எனவே, நெதர்லாந்தில் உள்ள உலக அமைதி நீதிமன்றத்தில் இரு நாடுகளையும் மனுதாரர்களாக சேர்த்து கச்சத்தீவு தன்னுடைய சொத்து என்று ராமநாதபுரம் மன்னர் வழக்கு தொடுக்க முடியும்.

கச்சத்தீவை உரிமை கோரி ராமநாதபுரம் மன்னர் வழக்கு தொடர முகாந்திரம், தகுந்த சட்ட ஆதாரங்கள் உள்ளன. சட்ட நிபுணர்களுடன் கலந்துபேசி எதாவது ஒரு வகையில் கச்சத்தீவை மீட்க திமுக நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.