12ம் வகுப்புபொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான வேதியியல் வினாத் தாளில் தவறான கேள்வி கேட்கப்பட்டிருந்ததால், அதற்கு பதில் எழுத முயற்சித்த அனைத்து மாணவர்களுக்கும் அந்த கேள்விக்கான முழு மதிப்பெண்களையும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கி மார்ச் 22ம் தேதி முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து 11ம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் 4ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெற்றது. தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. தேர்வுகள் முடிவடைந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை முதல் விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் துவங்கி நடைப்பெற்று வருகிறது.
83 மையங்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு விடைக் குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளதோடு, பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த ஆண்டு வேதியியல் பாடத்தில் மூன்று மதிப்பெண் பகுதியில் உள்ள 33வது கேள்வி தவறாக கேட்கப்பட்டிருப்பதாக மாணவர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த கேள்விக்கு பதில் எழுத முயற்சித்த அனைத்து மாணவர்களுக்கும் 3 மதிப்பெண் வழங்க தற்போது பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களுக்கும் அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.