புதுச்சேரி தொகுதியில் ஓட்டுக்கு ரூ.1,000 கொடுக்க பாஜக திட்டம் : அதிமுக குற்றச்சாட்டு

அரசு நிர்வாகம் ஒருதலைப்பட்சமாக பாஜக வேட்பாளருக்கு தேர்தல் பணி ஆற்றுவதால் நடைபெற இருக்கும் புதுச்சேரி மக்களவைத் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என புதுச்சேரி அதிமுக வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “புதுச்சேரி மக்களவைத் தேர்தல் நடவடிக்கைகள் நேர்மையாக, வெளிப்படையாக, சமநிலையோடு நடக்கவில்லை. மாநில உள்துறை அமைச்சராக போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு அரசு இயந்திரங்கள் முழுமையாக தேர்தல் சட்ட விதிகளுக்கு புறம்பாக துணை நிற்கின்றன. அவரது பிரச்சாரத்தின்போது காவல் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் கலந்துகொண்டு வருகின்றனர்.

ஒவ்வொரு பிரச்சாரத்தின்போதும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து வருகின்றன. ஆனால், இதை தேர்தல் துறை கண்டுகொள்ளவில்லை. தற்போது வயது முதிர்ந்தவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் வீட்டில் இருந்தே தபால் வாக்கு போடப்படுகிறது. இது சம்பந்தமான அரசு துறை ஊழியர்களை தன்வசப்படுத்திக் கொண்டு அவர்களது முகவரி பட்டியலை பாஜகவினர் கையில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு வாக்குக்கும் நேரடியாக வீட்டுக்கே சென்று ரூ.500 பணம் கொடுக்கின்றனர். இது சர்வ சாதாரணமாக வெளிப்படையாக நடக்கிறது.

இந்த தேர்தலில் கண்டெய்னர் மூலம் பாஜக வேட்பாளருக்கு பணம் வந்து சேர்ந்துள்ளதாக பேசப்படுகிறது. அந்தப் பணம் முக்கிய நிர்வாகிகளிடம் பிரித்து கொடுக்கப்பட்டு ஒவ்வொரு ஓட்டுக்கும் சுமார் ரூ.1,000 வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது. புதுச்சேரி அரசு நிர்வாகமே ஒருதலைப்பட்சமாக பாஜக வேட்பாளருக்கு தேர்தல் பணி ஆற்றுவதால் நடைபெற இருக்கும் புதுச்சேரி மக்களவைத் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும்.

பாஜகவை ஆதரித்து முதல்வர் பிரச்சாரம் செய்யப் போகும் இடமெல்லாம் ரேஷன் கடை திறப்பது, இலவச அரிசி போடுவது சம்பந்தமாக தானாக முன்வந்து பொதுமக்கள் முதல்வரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இது சம்பந்தமாக முதல்வரும், பாஜக வேட்பாளராக உள்ள அமைச்சரும் இந்தத் தேர்தல் முடிந்தவுடன் ரேஷன் கடைகள் திறக்கப்படும், இலவச அரிசி போடப்படும் என்கின்றனர்.

ஒரு படி மேலே சென்று உள்துறை அமைச்சர் பதவியோடு இந்தத் தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் நமச்சிவாயம், நான் மற்றவர்களை போல் அல்ல. தனக்குள்ள திறமைகளை பயன்படுத்தி ரேஷன் கடைகளை திறந்து இலவச அரிசியை வழங்குவேன் என்கின்றார். ஏன்… ஆட்சி அமைந்து மூன்று ஆண்டு காலம் இவரது திறமையை காண்பிக்க முன்வரவில்லை. இவரை தடுத்தது யார்? ரேஷன் கடைகளை திறப்பதும், இலவச அரிசி போடுவதும் மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதை கூட மறைத்து அப்பாவி பொதுமக்களிடம் பொய் பேசுவதை பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மூன்று ஆண்டு காலமாக மாநில அரசால் செயல்படுத்தவே முடியாத எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தாமல் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் நாங்கள் செயல்படுத்துவோம் என்று கூறுவது மக்களை ஏமாற்றும் செயலாகும். இதை உணர்ந்து வாக்காளர் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்” என்று அன்பழகன் கூறினார்.