“பிரதமர் மோடி சீனாவுக்கான தூதராக பணியாற்றலாம்” என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக சாடியுள்ளார்.
இந்தியாவில் உள்ள அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தை சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தின் பல பகுதிகளுக்கு தங்களின் மொழியில் புதிய பெயர்களை அறிவித்தும், அவற்றை தங்கள் நாட்டு வரைபடத்தில் இணைத்தும் சீனா தொடர்ச்சியான அத்துமீறல்களை செய்துவருகிறது.
சமீபத்தில், இந்தியா – சீனா எல்லை கட்டுப்பாடு கோடு அருகே உள்ள அருணாச்சலப் பிரதேச மாநிலத்துக்கு சொந்தமான 30 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியுள்ளது. சீன அரசின் இந்த நடவடிக்கைக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தை அரசியல் கட்சிகள் கையில் எடுத்து பாஜகவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில், பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். அதில், ‘சீனா தங்கள் விருப்பப்பட்டபடி அருணாச்சல பிரதேசத்தில் இருந்து லடாக் வரையிலான இந்திய பகுதிகளை ஆக்கிரமித்து வருகிறது. மோடி தனது சிவந்த கண்களை காண்பித்ததால் யாரும் இந்திய பகுதிக்குள் வரவில்லை. நாமும் ஆக்கிரமிப்பில் ஈடுபடவில்லை என்று கூறுகிறார். தேவையின்றி சத்தமிட்டு கொண்டிருக்கும் பிரதமர் மோடி, சீனாவுக்கான இந்திய தூதராவிடலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.