கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவை மாநில தலைவர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா வலியுறுத்தியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் உள்ள ஷிமோகா தொகுதியில் போட்டியிட பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா விருப்பம் தெரிவித்தார். அதே போல ஹாவேரி தொகுதியில் தன் மகன் காந்தேஷூக்கு வாய்ப்பு கேட்டார். ஆனால் பாஜக மேலிடம் இருவருக்கும் சீட் கொடுக்கவில்லை. ஷிமோகாவில் எடியூரப்பாவின் மூத்த மகன் ராகவேந்திராவுக்கும், ஹாவேரியில் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் அதிருப்தி அடைந்துள்ள ஈஸ்வரப்பா, ஷிமோகாவில் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து தன் ஆதரவாளர்களுடன் மூன்று கட்டங்களாக ஆலோசனை நடத்தியுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்துள்ள எடியூரப்பா, பாஜக மேலிடத் தலைவர்கள் மூலம் ஈஸ்வரப்பாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். அந்த முயற்சி வெற்றி அடையவில்லை.
இந்நிலையில் நேற்று பெங்களூரு வந்த மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா ஈஸ்வரப்பாவை சந்திக்க விரும்பினார். தன்னை சந்திக்க வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார். அதனை ஏற்க மறுத்த ஈஸ்வரப்பா, அமித் ஷா நீண்ட நேரம் காத்திருந்தும் அவரை சந்திக்க வரவில்லை. இதனையடுத்து அமித் ஷா மாலையில் ஈஸ்வரப்பாவை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு பேசினார்.
இதுகுறித்து ஈஸ்வரப்பா ஷிமோகாவில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,” அமித் ஷா என்னுடன் தொலைபேசியில் பேசினார். ஷிமோகாவில் சுயேச்சையாக போட்டியிட வேண்டாம் என கோரிக்கை விடுத்தார். இன்று அவரை சந்திக்க டெல்லி வருமாறு கூறினார்.
அதன்படி இன்று அமித் ஷா சந்திப்பில், கர்நாடக பாஜகவில் எடியூரப்பாவின் குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் கட்சி தவிக்கிறது. அவர்கள் நினைத்தபடியே எல்லாம் நடக்கிறது. மூத்தவர்களுக்கும் கட்சிக்கு உழைத்தவர்களுக்கும் எந்த மரியாதையும் இல்லை. இன்று எடியூரப்பாவின் இளைய மகன் விஜயேந்திராவை கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும். இல்லாவிடில் நான் எடியூரப்பாவின் மூத்த மகன் ராகவேந்திராவை எதிர்த்து ஷிமோகாவில் சுயேச்சையாக போட்டியிடுவேன் என அவரிடம் திட்டவட்டமாக தெரிவித்தேன்” என்றார்.