கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கு அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த முறை கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு 4 லட்சம் வாக்குகளுக்கு மேல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதனால் இந்த முறையும் அவர் மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். அதற்காக இன்று ரோடு ஷோ நடத்தி தனது தங்கை பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆனி ராஜாவை எதிர்த்து ராகுல் காந்தி போட்டியிடுவதற்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் ஆனி ராஜா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தேசிய தலைவராவார். மணிப்பூர் விவகாரத்தில் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்தவர். மணிப்பூரில் சிறுபான்மை மக்களுக்கு நடந்த கொடுமைகளை அம்பலப்படுத்தியவர். இதுபோல ராகுல் காந்தி ஏதாவது செய்துள்ளாரா? ஆனால் அவர் கேரளாவுக்கு வந்து ஆனி ராஜாவை எதிர்த்து தேர்தலில் நிற்கிறார். நாட்டில் அநீதிக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் ஆனி ராஜா பங்கேற்பார். அது போன்ற கூட்டங்களில் ராகுல் காந்தியை எங்காவது பார்க்க முடியுமா?
ராகுல் காந்தி, கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்து போட்டியிடுவது பொருத்தமற்றது என நாட்டு மக்கள் விமர்சிக்கின்றனர். அவர் பாஜகவை எதிர்த்து நேரடியாக வேறு தொகுதியில் போட்டியிட்டு இருக்க வேண்டும்” என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.