“நீங்கள் செய்தது அப்பட்டமான அத்துமீறல்” – பாபா ராம்தேவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

தவறான விளம்பரங்கள் தொடர்பான வழக்கில் “நீங்கள் செய்தது அப்பட்டமான அத்துமீறல்” என்று யோகா குரு பாபா ராம்தேவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி மற்றும் நவீன மருத்துவ முறைகளுக்கு எதிராக பாபா ராம்தேவ் நிறுவனம் அவதூறு பிரச்சாரம் செய்வதாக இந்திய மருத்துவக் கழகம் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் மீது ஏன் அவமதிப்பு வழக்கு தொடரக் கூடாது என்று விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து, பாபா ராம்தேவும், பதஞ்சலி நிறுவனத்தின் மோலண்மை இயக்குநர் ஆச்சாரியா பாலகிருஷ்ணாவும் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார்.

அப்போது, ராம்தேவ் தரப்பு வழக்கறிஞர், தாங்கள் நேரில் ஆஜராகி இருப்பதையும், நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதையும் நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் எனக் கோரினார். அதற்கு, ‘பாபா ராம்தேவ் கோரிய நிபந்தனையற்ற மன்னிப்பு வெறும் வாய்வார்த்தை’ என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

நீதிமன்றத்திடம் அளித்துள்ள உறுதிமொழிகளை பாபா ராம்தேவின் நிறுவனம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்திய உச்ச நீதிமன்றம், “நீங்கள் ஒவ்வொரு தடையையும் மீறி இருக்கிறீர்கள். இது அப்பட்டமான அத்துமீறல். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் மட்டுமின்றி நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்ற உத்தரவுகளும் மதிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தது.

மேலும், அவமதிப்பு நடவடிக்கைக்கு பதிலளிக்க பாபா ராம்தேவுக்கு மேலும் ஒரு வாய்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஏப்ரல் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

முன்னதாக, கடந்த 2023 நவம்பர் 21-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில், எந்த சட்ட விதிகளையும் மீறமாட்டோம் என்று பதஞ்சலி நிறுவனம் உறுதி அளித்திருந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி ஹிமா ஹோக்லி தலைமையிலான அமர்வில், “பிற மருத்துவ முறைகளுக்கு எதிரான எந்த ஒரு அறிக்கையும், ஊடகங்களில் வெளியிடப்பட மாட்டாது” என்று உறுதியளித்து இருந்ததது.

எனினும், தனது உத்தரவுகளை பதஞ்சலி நிறுவனம் மீறி இருப்பதை உச்ச நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, பாபா ராம்தேவும், ஆச்சாரிய பாலகிருஷ்ணாவும் நேரில் ஆஜராக வேண்டும் என்று மார்ச் 19-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.