சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் நக்சலைட்கள் 8 பேர் சுட்டுக் கொலை

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் நடந்த மோதலில் நக்சலைட்கள் 8 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

இது குறித்து ஐஜி (பஸ்தர் பகுதி) சுந்தர்ராஜ் கூறுகையில், “கங்காலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லேந்த்ரா கிராமத்தில் உள்ள காட்டுப் பகுதியில் இன்று காலை 6 மணிக்கு பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. மாவட்ட ரிசர்வ் படை, சிறப்பு அதிரடி படை, மத்திய ரிசர்வ் போஸீஸ் படை மற்றும் அதன் கமாண்டோ பிரிவான கோப்ரா ஆகியவை இணைந்து இந்தக் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டன.

துப்பாக்கிச் சூடு நிறைவடைந்த பின்னர் அந்த இடத்தில் இருந்து ஒரு எல்எம்ஜி துப்பாக்கி மற்றும் பிற ஆயுதங்களுடன் நக்சலைட்கள் 4 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, மேலும் நான்கு உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. நக்சலைட்களுக்கு எதிரான தேடுதல் வேட்டை மேலும் தொடர்ந்து வருகிறது” என்றார்.

இந்தத் தாக்குதல் நடந்திருக்கும் பிஜப்பூர் மாவட்டம், பஸ்தர் மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது. இங்கு 2024 பொதுத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப் பதிவு நடக்கும் வரும் 19-ம் தேதி நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இதே பிஜப்பூரில் மார்ச் 27-ம் தேதி நடந்த துப்பாக்கிச் சண்டை சம்பவத்தில் 6 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். இன்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் உட்பட இந்த ஆண்டு இதுவரை 41 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர் என்பது நினைவுகூரத்தக்கது.