“கச்சத்தீவு குறித்த ஆர்.டி.ஐ.யில் வெளியான தகவல் பச்சைப்பொய்” – அமைச்சர் பிடிஆர் தாக்கு

“கச்சத்தீவு குறித்து ஆர்.டி.ஐ.யில் வெளியான தகவலை வைத்து பச்சை பொய்யை பரப்புகின்றனர். படித்த மாநிலத்தில் டுபாக்கூர் வேலை பார்க்க முயல்கின்றனர்” என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணியின் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக மதுரை நேதாஜி ரோடு, ஜான்சி ராணி பூங்கா காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் தகவல் மற்றும் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று (செவ்வாய்க்கிழமை) பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது, அவர் பேசுகையில், “இந்த தேர்தல் சாதாரண தேர்தல் இல்லை. இரண்டே இரண்டு கருத்தை மட்டும் வைக்க விரும்புகிறேன். தமிழகம் பழைய தவறான பாதையைவிட்டு தற்போது முன்னேறியுள்ளது. முதல்வரின் தயவால், என் உழைப்பின் பயனாக எண்ணற்ற திட்டங்கள் மதுரைக்கும், மதுரை மாநகராட்சிக்கும் கிடைத்துள்ளன. மாநிலத்திலும் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 1 ரூபாய்க்கு 35 பைசா வரியை கொடுத்ததை நிறுத்தி, 29 பைசா கொடுப்பதை நாடாளுமன்றத்தில் பெருமையாகப் பேசுகின்றனர். மாநிலப் பட்டியலில் உள்ள கல்வி உரிமை நிதி உரிமையை பறித்துள்ளனர். திறனற்ற ஆளுநரை பொறுப்பில் வைத்துள்ளனர்.

கச்சத்தீவு குறித்து ஆர்டிஐ வெளியாகி உள்ளதாக பச்சைப் பொய்யை கிளப்பி விட்டுள்ளனர். படித்த மாநிலத்தில் டுபாக்கூர் வேலை பார்க்க முயல்கின்றனர். ஜனநாயகம், நாட்டின் மீதும் பற்றுள்ளவர்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள். பிரிட்டிஷ் அரசாங்கம் மீண்டும் வந்துவிட்டதா என்பதை போல பாஜக பற்றி மக்கள் யோசிக்கின்றனர்.

தேர்தல் நேரத்தில் இரண்டு மாநில முதல்வர்களை கைது செய்து, எதிர்க்கட்சிகளின் வங்கிக் கணக்கை முடக்கி சமமான தேர்தலை சந்திக்க முடியாத நிலையை உருவாக்கி உள்ளனர். தேர்தல் ஆணையர் ஏன் 10 நாளுக்கு முன்பு ராஜினாமா செய்கிறார். புதிய சட்டத்தில் 2 தேர்தல் ஆணையர்களை நிமிக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

ஒரு மக்களவை தேர்தலை நடத்த 3 மாதமாகும் நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தலை எப்படி நடத்துவீர்கள். ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்தினால் 2 ஆண்டுடாகும். 543 இடங்களுக்கு 3 மாதத்தில் தேர்தல் நடத்தும் ஆணையம் எப்படி ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்த முடியும். ஜாமீன் கொடுக்காமல் ஒரு அமைச்சரை ஓராண்டு சிறையில் வைக்கின்றனர்.

டெல்லியிலும் அமைச்சர்களை சிறை வைத்துள்ளனர். அன்றைக்கு சர்வாதிகார பிரிட்டிஷ் மன்னர் லண்டனில் இருந்தார். இன்று டெல்லியில் உள்ளார். இந்த ஆட்சி மீண்டும் தொடர்ந்தால் ஜனநாயகம் அழிந்துவிடும்” என்று அவர் கூறினார்.