மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு 6 மாதங்களாக சிறையில் உள்ள ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என்று அமலாக்கத் துறை தெரிவித்த பிறகு அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
முன்னதாக, ஜாமீன் வழக்கு விசாரணையை மேற்கொண்ட நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபாங்கர் தத்தா மற்றும் பிபி வரலே ஆகிய 3 பேர் கொண்ட அமர்வு, “இந்த வழக்கில் சஞ்சய் சிங்கிடம் இருந்து ஊழல் பணம் எதுவும் மீட்கப்படவில்லை. ஆனாலும், அவரை ஆறு மாதங்களாக சிறையில் வைத்துள்ளீர்கள். அவருக்கு தற்போது காவல் தேவையா இல்லையா என்பதை நீதிமன்றம் அறிய விரும்புகிறது. அவர் ரூ.2 கோடி லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டை விசாரணையில்கூட நீங்கள் அறிந்துகொள்ளலாம்” என்று அமலாக்கத் துறைக்கு கேள்வி எழுப்பியது.
தொடர்ந்து அமலாக்கத் துறை ஜாமீன் வழங்க ஆட்சேபனை இல்லை எனத் தெரிவிக்கப்படவே, ”ஜாமீனில் இருக்கும் வரை இந்த வழக்கு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க வேண்டாம்’ என்கிற நிபந்தனையுடன் சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதன் மூலம், மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் ஜாமீன் பெற்ற முதல் மூத்த ஆம் ஆத்மி தலைவராகியுள்ளார் சஞ்சய் சிங். முன்னதாக, இதே வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகிய ஆம் ஆத்மி தலைவர்கள் சிறையில் உள்ளனர். இவர்கள் தவிர, தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா இதே வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.