மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத மூத்த தலைவர்களின் போர்க்கொடியால் கர்நாடக பாஜகவில் உட்கட்சிப் பூசல் உச்சகட்டம் அடைந்துள்ளது.
ஷிமோகா, சித்ரதுர்கா, பெங்களூரு வடக்கு, சிக்கமங்களூரு, மைசூரு, தாவணகரே தொகுதிகளில் பாஜகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஷிமோகா தொகுதியில் பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா மகனுக்கு எதிராக அதே கட்சியை சேர்ந்த ஈஸ்வரப்பா போட்டி வேட்பாளராக நிற்கிறார். கர்நாடக முன்னாள் துணை முதலமைச்சரான ஈஸ்வரப்பா போட்டி வேட்பாளராக நிற்பதால் எடியூரப்பா மகனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மத்திய அமைச்சராக இருந்த நாராயணசாமி, சித்ரதுர்கா தொகுதியில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பாஜகவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். பெங்களூரு வடக்கு தொகுதியில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு வாய்ப்பு வழங்காமல் சோபா கரந்தலஜேவுக்கு வாய்ப்பு வழங்கியதால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சதானந்தா கவுடா ஆதரவாளர்கள் சோபா கரந்தலஜேவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பாஜக வேட்பாளருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சோபா கரந்தலஜேவுக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் சதானந்த கவுடா, தனக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்ததாகவும் கூறியிருந்தார்.
சிக்கமங்களூருவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட சி.டி.ரவி, மைசூருவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரதாப் சின்ஹாவும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். 6 தொகுதிகளிலும் உட்கட்சிப் பூசல் உச்சமடைந்துள்ளதால் பெங்களூரு பிரச்சாரத்துக்கு வந்துள்ள அமித் ஷா கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். அதிருப்தி பாஜக தலைவர்களை நேரில் அழைத்து சமரச பேச்சு நடத்த அமித்ஷா திட்டமிட்டுள்ளார்.