மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் நாளே நொய்யல் நதியை மீட்கும் பணியை தொடங்குவேன் என கோவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டார்.
தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். கோவை தொகுதி முழுக்க தீவிரமாக வாக்கு சேகரித்து வரும் அண்ணாமலை பல்வேறு உறுதிமொழிகளையும் அளித்து வருகிறார். அந்த வகையில் நொய்யல் நதியை மீட்கும் நடவடிக்கைகளை தொடங்குவேன் எனவும் அவர் தற்போது உறுதிமொழி அளித்துள்ளார்.
பாமக மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி, நொய்யல் நதியில் சாயக்கழிவுகள் கலந்து மாசுபட்டு வருவதாகவும், அதனை மீட்க வேண்டும் என்று அண்ணாமலையிடம் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று அசோக் ஸ்ரீநிதியின் உறுதிமொழி பத்திரத்தில் அண்ணாமலை கையெழுத்திட்டுள்ளார்.
அதில், ‘கழிவு நீர் மற்றும் மனிதக் கழிவு கலப்பதால் நொய்யல் நதி நஞ்சை சுமக்கும் நதியாக மாற்றப்பட்டிருக்கிறது. நொய்யல் ஆறு மீட்கப்பட வேண்டும், அதனால் கொங்கு செழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி முன் வைத்திருக்கிறார். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறேன். எம்பி தேர்தலில் வெற்றி பெற்றால் முதல் நாளே இதற்கான பணியை தொடங்குவேன். ஒரு வருடத்தில் நொய்யலை மீட்டெடுப்பேன்’ என்று அண்ணாமலை உறுதியளித்துள்ளார்.
கொங்கு மண்டல மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக நொய்யல் நதி மீட்பு இருந்து வருகிறது. அதனை சரியாக புரிந்து கொண்டு அண்ணாமலை உறுதியளித்துள்ளதன் மூலம் வாக்காளர்களை கவரும் முயற்சியில் இறங்கியுள்ளார்.