மதுபானக் கொள்கை முறைகேடு விவகாரம் தொடர்பான வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலை ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்படுகிறார்.
அரசு மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடந்த 21-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவர் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மார்ச் 28-ம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்பின்னர் மார்ச் 28 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஏப்ரல் 1 ஆம் தேதி (இன்று) வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 1) அவர் மீண்டும் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத் துறை காவல் நீட்டிப்பை கோரவில்லை. ஆனால் கேஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. வேண்டுமென்றே விசாரணையை திசை திருப்புகிறார். அவருடைய டிஜிட்டல் உபகரணங்களின் கடவுச் சொற்களைத் தர மறுக்கிறார். ஆகையால் அவரை நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும் என்று அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனயைடுத்து கேஜ்ரிவாலை வருகிற ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அரவிந்த் கேஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட இருக்கிறார். எனினும், அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. இப்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்படுவதால் அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அமலாக்கத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தபோது கேஜ்ரிவால், சிறையில் இருந்தபடியே உத்தரவுகளை பிறப்பித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அரவிந்த் கேஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பிரதமர் மோடி செய்வது நாட்டுக்கு நல்லதல்ல” என்று கூறினார். இன்றைய விசாரணையின் போது ஆம் ஆத்மி அமைச்சர்கள் அதிஷி, சவுரப் பரத்வாஜ், கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறைக்கு கேஜ்ரிவால் தன்னுடன் பகவத் கீதா, ராமாயணம், நீரஜ் சவுத்ரியின் ஹவ் பிஎம் டிசைட்ஸ் ஆகிய நூல்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்கள் மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், சத்யேந்திரா ஜெயின் ஆகியோரும் தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகரராவின் மகன் கவிதாவும் திகார் சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.