“தமிழ்நாடு அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகை, பாதி டாஸ்மாக்கிற்கும், மீதி சைடு டிஷ்ஷுக்கும் தான் போகிறது” என அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி விமர்சித்துள்ளார்.
காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜசேகருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் வளர்மதி இன்று 20-கும் மேற்பட்ட கிராமங்களில் பிரச்சாரம் செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குக் கேட்டனர்.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, ”எல்கேஜி படிக்கும் குழந்தைக்குக்கூட திமுக அரசு வந்ததிலிருந்து பாதுகாப்பு இல்லை. அயோக்கியர்கள் காவல்துறை உதவியுடனேயே குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கின்றனர். இவை அனைத்திற்கும் காரணம் கஞ்சா தான். காவல்துறை உதவியுடனே கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. தவறு செய்தவர்களை பிடித்து விசாரித்தால், கஞ்சா போதையில் செய்துவிட்டேன் என்று கூறுகின்றனர்” என்றார்.
மேலும், ”அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கொடுத்த அழுத்தத்தால் தான் மகளிர் உரிமைத் தொகை ஒரு சில பேருக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களைக் கூறி தகுதி இல்லை எனக் கூறுகின்றனர். பெண்ணாக இருந்தாலே தகுதி தானே. அதைவிட வேறு என்ன தகுதி வேண்டும்? அப்படி வரும் ஆயிரம் ரூபாய் பணத்தை கூட பெண்கள் அவர்கள் தேவைக்கு பயன்படுத்த முடியவில்லை. அதை ஆண்கள் பிடுங்கிக் கொண்டு டாஸ்மாக்கிற்கு கொடுத்து விடுகின்றனர். 500 ரூபாய் சரக்குக்கும், 500 ரூபாய் சைடு டிஷ்ஷுக்கும் சென்று விடுகிறது” என்றார் வளர்மதி.