தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் பொய் கூறி இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு நாளும் பாசாங்குத்தனத்தின் புதிய உச்சத்தைத் தொடுகிறார்; நேர்மையின்மையின் புதிய வீழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.
தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி, நாட்டு மக்களிடம் பொய் கூறி இருக்கிறார். தன்னால் ஏற்படுத்தப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தின் மூலம்தான், அரசியல் கட்சிகளுக்கு நிதி எங்கிருந்து வந்தது, எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பது தெரியும்படி மாற்றப்பட்டது என்று அவர் கூறி இருக்கிறார். ஆனால், உண்மை அதுவல்ல. தேர்தல் பத்திர திட்டம் அநாமதேய முறையில் வடிவமைக்கப்பட்ட ஒன்று. வேறு வார்த்தைகளில் கூறுவதாக இருந்தால், தேர்தல் பத்திர திட்டத்தின் மூலம், “எங்கிருந்து நிதி வந்தது, அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன” என்பது குறித்த விவரங்களை பொதுமக்களிடமிருந்து மறைக்க பிரதமர் மோடி விரும்பினார்.
2018 முதல் 2024 வரையிலான ஆறு ஆண்டுகளாக, எந்தக் கட்சி எந்த நன்கொடையாளரிடம் இருந்து நிதி பெற்றது என்ற விவரம் பொதுமக்களுக்கு தெரியவரவில்லை. உச்ச நீதிமன்றம்தான் இதில் தலையிட்டு தேர்தல் பத்திரத் திட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று தீர்ப்பளித்தது. நீதிமன்றத்தில் கடைசி நாள் வரை, மோடி அரசு இந்தத் திட்டத்தைப் பாதுகாக்க முயன்றது.
இறுதியாக, எந்த கட்சிக்கு யார் நன்கொடை அளித்தார்கள் என்ற விவரங்களை வெளியிட வேண்டும் என்று எஸ்பிஐ-யிடம் உச்ச நீதிமன்றம் கோரியது. ஆனாலும், ஆளும் கட்சியினரின் ரிமோட் மூலம் இயங்கும் எஸ்பிஐ, இந்த தகவலை சேகரிக்கவில்லை என்று நீதிமன்றத்தில் பொய் கூறியது. பின்னர், தரவுகளை தொகுக்க மூன்று மாத கால அவகாசம் கோரியது. அதாவது, தேர்தல் முடியும் வரை நீட்டிக்க கோரியது. உச்ச நீதிமன்றத்தின் வலுவான தலையீடு காரணமாகத்தான், சில நாட்களில் தரவுகளை பகிரங்கமாக வெளியிட எஸ்பிஐ முன்வந்தது.
நன்கொடை அளித்தவர்களையும், நன்கொடை பெற்றவர்களையும் பொருத்திப் பார்க்க 3 மாத கால அவகாசம் தேவை என உச்ச நீதிமன்றத்தில் பொய் சொன்னது எஸ்பிஐ. இந்த விவரங்களை பைதான் குறியீடு மூலம், பொருத்திப் பார்க்க எங்கள் குழுவுக்கு 15 வினாடிகள்கூட ஆகவில்லை.
தேர்தல் பத்திர திட்டம் காரணமாக பின்னடைவைச் சந்திக்க அதில் நான் என்ன தவறு செய்தேன் என பிரதமர் கேட்கிறார். உங்கள் கட்சியும் அரசும் மிகப் பெரிய ஊழலை செய்திருப்பதை தரவுகள் வெளிப்படுத்தி உள்ளன. ரூ. 4 லட்சம் கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள், திட்டங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதிகள் பெற்ற பெருநிறுவன நன்கொடையாளர்கள், உங்கள் கட்சிக்கு வழங்கிய ஆயிரக்கணக்கான கோடி தேர்தல் பத்திரங்களுடன் இணைக்கப்படலாம். இந்திய அரசு ஒரு பல்பொருள் அங்காடியைப் போல் செயல்பட்டுள்ளது.
நிறுவனங்களில் நடத்தப்பட்ட சுமார் 40 அமலாக்கத்துறை / வருமான வரித்துறை / சிபிஐ சோதனைகளைத் தொடர்ந்து அந்த நிறுவனங்கள் பாஜகவுக்கு அதிக அளவில் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்துள்ளன. பிரதமரும் அவரது கூட்டாளிகளும் திட்டமிட்ட ரீதியில் வசூல் வேட்டை நடத்தி உள்ளனர். மோடி அரசின் ஊழல் கொஞ்ச நாளில் தெரியும். அதை தரவுகள் நிரூபிக்கும். துரதிர்ஷ்டவசமாக, பொய்யை மறைக்கும் முழு நேர வேலையை பிரதமர் தொடர்வார் என எதிர்பார்க்கலாம்” என்று ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.