புதுச்சேரி மக்களவைத் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் மயங்கி சரிந்த காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம்

தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் மயங்கி சரிந்தார். டாக்டர் பரிசோதித்த பிறகு அவர் சிறிது ஓய்வுக்குப் பிறகு பிரச்சாரத்தை தொடர்ந்தார்.

இந்தியா கூட்டணி கட்சி சார்பில் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். தொகுதி வாரியாக கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் வீதி, வீதியாக திறந்த ஜீப்பில் பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று காலை புதுச்சேரி காமராஜர் நகர் பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்தார். அப்போது வள்ளலார் சாலை அருகே ஜீவா நகரில் திறந்த ஜீப்பில் வாக்கு கேட்டு வந்துக்கொண்டிருந்தார். கடும் வெயில் இருந்தது. அப்போது திடீரென்று வைத்திலிங்கம் மயங்கி அருகேயிருந்த வைத்தியநாதன் எம்எல்ஏ மேல் சரிந்தார்.

அருகேயிருந்தோர் அவரை தாங்கிப் பிடித்தனர். ஜீப்பை நிறுத்தி அருகேயிருந்த வீட்டில் அமர வைத்தனர். டாக்டர் அங்கு வரவழைக்கப்பட்டு பரிசோதித்தனர். 73 வயதான வைத்திலிங்கத்துக்கு குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர் தெரிவித்தார். அதிக வெயில் இருப்பதால் குடிநீர், ஜூஸ் குடிக்கக் கூறினார். இதையடுத்து எலுமிச்சை ஜூஸ் போட்டு தந்தனர். சிறிது ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் ஜீப்பில் ஏறி வாக்கு சேகரிப்பைத் தொடங்கினார்.