‘தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்கவிடாமல் தடுத்தவர்களுக்கு நன்றி’ – சு.திருநாவுக்கரசர்

‘தேர்தலில் போட்டியிட தனக்கு சீட் கிடைக்கவிடாமல் தடுத்தவர்களுக்கு நன்றி’ என திருச்சி தொகுதியின் தற்போதைய எம்பி-யும், காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவருமான சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் திருச்சி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தற்போது திருச்சி மக்களவைத் தொகுதி கூட்டணியில் உள்ள மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டு அக்கட்சியின் முதன்மை செயலாளரும், வைகோவின் மகனுமாகிய துரை வைகோ போட்டியிடுகிறார்.

முன்னதாக திருச்சி தொகுதியை திருநாவுக்கரசருக்கு ஒதுக்கக் கூடாது என அவரது அரசியல் எதிரிகள் காங்கிரஸ் கட்சிக்குள்ளும், திமுக தலைமைக்கும் தூபம் போட்டதாக தகவல்கள் கசிந்தன. குறிப்பாக திருச்சி தொகுதியில் வெற்றி பெற்ற பின்னர், திருநாவுக்கரசர் தொகுதி பக்கமே தலைகாட்டவில்லை என தேர்தல் நேரத்தில் செய்திகள் பரவத் தொடங்கியதால் இந்த முறை அவருக்கு மீண்டும் சீட் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது.

சமீபத்தில் திருச்சி வந்த திருநாவுக்கரசரிடம் நீங்கள் தொகுதி பக்கமே வரவில்லை என குற்றச்சாட்டு உள்ளதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு ஆத்திரமடைந்த திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் கடுமையாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் திருச்சி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் திருநாவுக்கரசருக்கு மயிலாடுதுறை தொகுதி ஒதுக்கப்படும் என பேச்சுகள் அடிபட்டன. அந்த தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் பிரமுகர்கள் கடும் போட்டியில் ஈடுபட்டதால் வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டது.

கடைசியில் மயிலாடுதுறைக்கு ஆர்.சுதா காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் இந்த மக்களவைத் தேர்தலில் திருநாவுக்கரசருக்கு எந்தத் தொகுதியிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சு.திருநாவுக்கரசர், கடந்த தேர்தலில் திருச்சியில் வேட்பாளராக போட்டியிட்ட எனக்கு வரலாறு காணாத வாக்குகளை அள்ளித்தந்து சுமார் 4,60,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாராளுமன்ற உறுப்பினராக, இந்தியாவிலேயே காங்கிரஸ் வேட்பாளர்களிலேயே அதிக வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த திருச்சி பாராளுமன்ற தொகுதி வாக்காளப் பெருமக்கள் அனைவரின் பாதங்களையும் தொட்டு என் நன்றியை மீண்டும் காணிக்கையாக்குகிறேன்.

கடந்த 5 ஆண்டுகளில் கொரோனா தொற்றால் பாதிப்புக்குண்டான சுமார் ஒன்றரை ஆண்டுகள் நீங்கலாக எனது பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து சுமார் 17 கோடி ரூபாய் மக்களின் நலனுக்காகவும் மற்றும் மக்கள் நலப் பணிகளுக்காகவும் இத்தொகுதியில் செலவிடப்பட்டுள்ளது. 288 பணிகள் ஆறு சட்டமன்ற தொகுதியிலும் என்னால் செய்து முடிக்கப்பட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கி அனைத்து பணிகளிலும் எந்த லஞ்ச, ஊழல் புகார்களுக்கும், ஆட்படாமல், நேர்மையாகவும், நாணயமாகவும் மக்கள் பணியாற்றியுள்ளேன்.

இத்தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட விரும்பியவர்களுக்கும், என் வாய்ப்புக்காக உதவிட முயன்றவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினராக நான் தொடரக் கூடாதென இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிட்டாமல்போக முயன்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி! என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.