“கடந்த 1970 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு அநாவசியமாக கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது” என்று பிரதமர் மோடி அக்கட்சி மீது இன்று குற்றம்சாட்டியுள்ளார்.
கச்சத்தீவு இலங்கை வசம் சென்றது தொடர்பாக வெளியாகியிருக்கும் தரவு ஒன்றின் அடிப்படையிலான ஊடகக் கட்டுரையை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, காங்கிரஸை நம்பகத்தன்மை அற்ற கட்சி என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரதமர் தனது எக்ஸ் பதிவில், “கச்சத்தீவு இலங்கை வசம் சென்றது தொடர்பான அந்தத் தரவுகள் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. காங்கிரஸ் கட்சி எப்படி அநாவசியமாக கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது என்ற புதிய உண்மை அதில் வெளிப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு இந்தியரையும் ஆத்திரமடையச் செய்துள்ளது. இந்தத் தரவு காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் நம்பமுடியாது என்று மக்கள் மனதில் மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.
இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களைப் பலவீனப்படுத்தும் நோக்கிலேயே கடந்த 75 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது” என்று கடுமையாக சாடியுள்ளார். மேலும் அந்தத் தரவுகளின் இணைப்பையும் பகிர்ந்துள்ளார்.
முன்னதாக கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, “1974-ம் ஆண்டு இந்திரா காந்தி அரசு கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்படைத்தது. அவர்கள் அரசியலுக்காக பாரத மாதாவை மூன்றாகப் பிரித்தனர்” எனக் கூறியிருந்தார்.
ராமேஸ்வரம் மற்றும் இலங்கைக்கு இடையில் அமைந்திருக்கும் கச்சத்தீவினை பாரம்பரியமாக தமிழக, இலங்கை மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர். 1974-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கச்சத்தீவினை இலங்கை அரசின் பகுதியாக அங்கீகரித்தார்.
இதனிடையே, மார்ச் 15-ம் தேதி கன்னியாகுமாரியில் நடந்த பேரணியில் பேசிய பிரதமர் மோடி, “கடந்த காலத்தில் திமுக செய்த பாவத்தினால் தான் தமிழக மீனவர்கள் இலங்கையிடமிருந்து இன்னல்களை சந்திக்கின்றனர்” என்று பேசியிருந்தார்.
இதனைக் கண்டித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் அப்பட்டமாக பொய் சொல்வதாகக் கூறியிருந்தார். இது தொடர்பாக முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில், “திமுக அரசின் கடும் எதிர்ப்பை மீறியே கட்சத்தீவு (1974, 1976 ஒப்பந்தங்கள்) இலங்கை அரசுக்கு கொடுக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையை தமிழக மக்கள் நன்றாக அறிவார்கள். ஒரு மாநில அரசு நாட்டின் பகுதி ஒன்றை மற்றொரு நாட்டுக்கு கொடுக்கும் என்று நம்பும் அளவுக்கு பிரதமர் அப்பாவியா” என்று கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.