கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத்தரும் நிர்வாகிகளுக்கு கார், பைக் பரிசு : கிருஷ்ணகிரி பாஜக வேட்பாளர் அறிவிப்பு

கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத் தரும், பாமக, பாஜக மாவட்ட செயலாளர்கள், வாக்குச்சாவடி முகவர்களுக்கு கார், இருச்சக்கர வாகனம், ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும் என பாஜக வேட்பாளர் நரசிம்மன் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி, கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை (தனி), வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி உள்ளிட்ட 6 தொகுதிகளைக் கொண்டது. இந்த மக்களவைத் தொகுதியில் அதிமுக, பாஜக, காங்கிரஸ், நாம் தமிழர் உட்பட அரசியல் கட்சியைச் சேர்ந்த 12 வேட்பாளர்கள், 15 சுயேச்சைகள் உட்பட 27 களத்தில் உள்ளனர். இதனிடையே கட்சியினர் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் எம்பி நரசிம்மன் போட்டியிடுகிறார். இவர் பாஜகவில் மாநில செய்தி தொடர்பாளராகவும் உள்ளார். பாஜக கூட்டணியில், பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்து வரும் நிலையில், ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிகளிலும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

அதன்படி நேற்று, ஊத்தங்கரையில் நடந்த அறிமுகக் கூட்டத்தில் பாஜக வேட்பாளர் நரசிம்மன் பேசும்போது, “ஊத்தங்கரை சட்டப்பேரவை தொகுதிகளில் அதிக வாக்குகள் பெற்று தரும் பாமக, பாஜக மாவட்ட செயலாளர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும். இதே போல் எந்த வாக்குச்சாவடியில் அதிக வாக்குகள் கிடைக்கிறேதோ, அந்த வாக்குச்சாவடி முகவர்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஊத்தங்கரை சட்டமன்ற பாஜக பொறுப்பாளர் எம்ஆர்.ராஜேந்திரன், “ஊத்தங்கரையில் உள்ள 257 வாக்குச்சாவடிகளில், பாஜகவிற்கு அதிக வாக்குகள் பெற்று தரும் வாக்குச்சாவடி முகவர்களுக்கு ரூ.1 லட்சம், ரூ-.70 ஆயிரம், ரூ-.50 ஆயிரம், ரூ-.10 ஆயிரம் என ரொக்க பரிசுகள் வழங்கப்படும்” என்றார்.

பாஜக, பாமக நிர்வாகிகள் களப்பணியில் தீவிரம் காட்டிடும் வகையில் பல்வேறு திட்டங்களை வேட்பாளர் நரசிம்மன் அறிவித்துள்ளது, கட்சியினரிடையே ஒருபுறம் உற்சாகம் இருந்தாலும், மறுபுறத்தில் சீட் கம்பெனி நடத்துகிறாரா என்று கட்சி நிர்வாகிகள் சிலர் கேள்வி எழுப்பினர்.