“தாவூத் இப்ராகிமையும் சுத்தம் செய்யும் வாஷிங் மெஷின் பாஜகவிடம் உள்ளது” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கெரா விமர்சித்துள்ளார்.
புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கெரா, “பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக வெளியான அனைத்து சிஏஜி அறிக்கைகளும் போலியானவை. நமது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை குழிதோண்டிப் புதைக்கும் கட்சியாக மாறிய மத்திய அரசு ஏஜென்சிகளின் ஒவ்வொரு அதிகாரியையும் நாங்கள் பின்தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறோம். யாரும் தப்பிக்க மாட்டார்கள். இந்தியாவின் முன்னாள் தலைமை கணக்குத் தணிக்கையாளர் வினோத் ராய், பாஜக அரசின் கைகளில் வெறும் பொம்மை மட்டுமே” என்று கடுமையாக சாடினார்.
முன்னதாக, இந்த செய்தியாளர் சந்திப்பில், ‘பாஜக வாஷிங் மெஷின்’ என்ற எழுதப்பட்டிருந்த இயந்திரத்தை அறிமுகப்படுத்தினார். இந்த வாஷிங் மெஷினில், ‘ஊழல்’, ‘பாலியல் வன்கொடுமை செய்வோர்’, ‘மோசடி பேர்வழி’ போன்ற வார்த்தைகள் எழுதப்பட்ட கறை படிந்த துணி உள்ளே போடப்பட்டது. சிறிது நேரத்தில் வாஷிங் மெஷினில் இருந்து துணியை எடுத்தபோது ‘பாஜக மோடி வாஷ்’ என்று எழுதப்பட்டிருந்த கரையே இல்லாத துணியாக அது இருந்தது.
இதன்பின் பேசிய பவன் கெரா, “புதியதாக ஒரு வாஷிங் பவுடர் கிடைத்துள்ளது. அது எல்லா கறையையும் நீக்கிவிடும். அதற்குப் பெயர் ‘மோடி வாஷிங் பவுடர்’. இதை பயன்படுத்தும் ‘பாஜக வாஷிங் மெஷின்’ விலை 8,552 கோடி ரூபாய். இது தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக பெற்ற தொகை.
இந்த இயந்திரம் 10 வயது பழமையான கறைகளைகூட அகற்றும். மேலும் இதில், பல்வேறு அம்சங்கள் உள்ளன. கறைகளை அகற்றும் அம்சம் பாஜக சேர்பவர்களை முழுவதுமாக சுத்தம் செய்யும். ஸ்பின் அம்சம் ஊழல் என்று கூறப்படும் நபரைக் கூட தேச பக்தராக்கும். ஸ்லோ அம்சம் பாஜகவில் சேர்ந்த தலைவர்களுக்கு எதிரான விசாரணைகளை நத்தை வேகத்தில் கொண்டு வரும்.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாஜகவில் இணைந்தால் அடுத்த நொடியே அவர் குற்றமற்றவர் ஆகிவிடுவார். தாவூத் இப்ராகிமையும் சுத்தம் செய்யும் வாஷிங் மெஷின் பாஜகவிடம் உள்ளது. அவரை பாஜக வாஷிங் மெஷினின் உள்ளே வைத்தால், வெளியே வரும்போது ராஜ்யசபா எம்பியாக கூட வரலாம்” என்று கிண்டலாக தெரிவித்தார்.