ராமேஸ்வரம் கஃபே ஓட்டல் குண்டு வெடிப்புக்காக வெடிகுண்டு செய்ய ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் : பெங்களூரு என்ஐஏ அதிகாரிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டல் குண்டு வெடிப்புக்காக ஆன்லைனில் பொருட்கள் வாங்கியது என்ஐஏ விசாரணையில் தற்போது தெரிய வந்துள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூரு ஒயிட்பீல்டில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் மார்ச் 1-ம் தேதி அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில் 9 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு குறித்து என்ஐஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான முஸாமில் ஷெரீப்பிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது 5 முதல் 6 ஆயிரம் ருபாய் செலவில் வெடிகுண்டு தயாரித்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஆன்லைனில் பல பொருட்களை வாங்கி இரண்டு மாதங்களில் வெடிகுண்டை தயாரித்துள்ளனர்.

வெடிகுண்டு தயாரிப்பதற்காக டெட்டனேட்டர், டைமர், பேட்டரி, பாஸ்பரஸ் (தீ குச்சியில் இருந்து எடுக்கப்பட்டது) உள்ளிட்ட பல பொருட்களை ஆன்லைனில் வாங்கினர். நெட், போல்ட், ஒயர் போன்றவற்றை கடைகளில் நேரடியாக வாங்கி வந்ததாக முஸாமில் ஷெரீப் தெரிவித்தார்.

ராமேஸ்வரம் ஓட்டலில் வெடித்த வெடிகுண்டை யார் தயாரித்தது என்பது குறித்து முஸாமில் ஷெரீப் எதுவும் கூறவில்லை. எனவே, முஸாமில் ஷெரீப்பிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிகிறது. இந்த வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரைக் கைது செய்ததையடுத்து, தலைமறைவாக உள்ள மற்ற இருவர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அறிவித்துள்ளது. சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்காக என்ஐஏ இருவரின் அடிப்படை விவரங்களையும் அளித்துள்ளது. அத்துடன் குற்றவாளிகளைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

இந்த நிலையில், என்ஐஏ அதிகாரிகள் குழுவினர் தீர்த்தஹள்ளியில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். தீர்த்தஹள்ளியில் உள்ள சோப்புகுடே, இந்திராநகர், பீடாமக்கி ஆகிய இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஷிமோகா விசாரணை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஷாரிக் மற்றும் மஸ் முனீர் ஆகியோரின் வீடும், தடை செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பின் செயல்பாட்டாளர்கள் சிலரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக என்ஐஏவுக்கு அதிரடி தகவல் கிடைத்துள்ளதாக தெரிகிறது.